Thursday, April 21, 2016

மிதிலா மிதிலா


மிதிலா மிதிலா

வெண் மணல் பரப்பினில்
மிதிலா மிதிலா
ஏர் முனையின் கீழல்ல
நீ தவழ்வது
பாதிராமணல்* விரிப்பில்

நித்யம்
அநித்யமாகி
சமுத்திரங்கள் வற்றி
வெண்குதிரைகள் கரையேறிவிட்டன

மிதிலா
நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

கரையோரங்களில்
உன் கண்களைப் பறிப்பது
மான் அல்ல
மாயமும் அல்ல
அவை
செம்மீன் தேடி வரும் நீர் நாய்கள்

மிதிலா
காகமாக அல்ல
அவன்
நீ வியந்து பார்க்கும்
பாம்புத்தாரா* *வாக  உருமாறிப்
பறந்துகொண்டிருக்கிறான்

பூமி புரண்டு
புலன்கள் திசை மாறி
இருபத்தியொன்றாம் நூற்றாண்டு
எல்லோரையும் வெளியேற்றிவிட்டது
அவர்களும் இவர்களும்
இவனும் அவனும்கூட
இந்தத் தீவிலிருந்து
கரையேறிச் சென்றுவிட்டார்கள்

நீதம்
அநீதமாகி
அநீதமே
நீதமான பிறகு
பாவக் கனி விழுங்கிய பறவையாக
பாதிராமணல் மீது
ஏன் பறந்துகொண்டிருக்கிறாய்?

மிதிலா மிதிலா

* ஆலப்புழா மாவட்டத்தில் வேம்பநாடு ஏரியின் நடுவில் உள்ள சிறிய தீவு பாதிராமணல். முஹம்மா பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்தச் சிற்றூரில் வாழ்ந்த குடும்பங்கள் 1970களுக்குப் பிறகு வெளியேறிவிட்டன. இப்போது பாதிராமணல் ஆளரவமற்ற தீவு.

* * பாம்புத்தாரா, பாம்புபோல் நீண்டு வளைந்த தலையுள்ள பறவை. வேம்பநாடு ஏரியில் பரவலாகக் காணப்படும்பறவையினங்களுள் ஒன்று. 

(காலச்சுவடு ஏப்ரல் இதழ் 2016)

Sunday, February 28, 2016

ஸ்பானிய இயக்குநர் கார்லோஸ் சாரா - வாழ்வுடன் தொடர்புடைய கதைகளையே விரும்புகிறேன்

 
ஸ்பானிய நாட்டுப் புற இசை வடிவமான ஃபிளமாங்கோவைப் பற்றிய ‘ஃபிளமாங்கோ’ உங்களுடைய மிக முக்கியமான படமாகப் பேசப்படுகிறது. ஃபிளமாங்கோவை எப்போது விரும்பத் தொடங்கினீர்கள்?

நான் குழந்தையாக இருந்தபோது ஃபிளமாங்கோ தெருவில் பாடப்படும் இசையாக இருந்தது. 1936ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின்போதும், போருக்குப் பிறகும் தென்பகுதியில் இருந்து கட்டட வேலைகளுக்காக மாட்ரிட் வந்த தொழிலாளர்கள் இதைப் பாடுவார்கள். ஆனால் இப்போது தெருக்களில் ஃபிளமாங்கோவை யாரும் பாடுவதில்லை. ஃபிளமாங்கோ வேறு மாதிரியாக மாறிவிட்டது. கலாச்சார ரீதியாகவும் ஒழுங்குரீதியாகவும் மாறிவிட்டது. இளைஞன் ஆனபோது எனக்கு ஃபிளமாங்கோ மீது ஆர்வம் வந்தது. 

உங்களுடைய பெரும்பாலான படங்கள் நாடகம்போல இருக்கின்றன. இதைத் திட்டமிட்டுச் செய்கிறீர்களா?
 
ஆம். நாடகங்களைத்தான் படமாக்க முயன்றிருக்கிறேன். நாடகத்தில் உள்ள எளிய அழகியல் கூறுகளையும் ஓபரா நாடக மொழியையும் படங்களில் பயன்படுத்துகிறேன். இன்னொரு விஷயம், நான் நாடகங்களையும் இயக்கி இருக்கிறேன் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. 

உங்கள் எல்லாப் படங்களும் ஸ்பெயினைப் பின்னணியாகக் கொண்டவை. வெளியில் படம் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் நீங்கள் ஏன் முயற்சிக்கவில்லை? சொந்த மண்மீது உள்ள பிடிப்புதான் காரணமா?
 
எனக்குத் தெரிந்த விஷயங்களை எடுப்பது எளிதாக உள்ளது. என் கலாச்சாரப் பின்புலத்திற்கு நெருக்கமான சில நாடுகளில் வேலை பார்த்திருக்கிறேன். ஆனாலும் என் வாழ்க்கையோடு தொடர்புடைய கதையைத்தான் படமாக எடுக்கத் தேர்ந்தெடுப்பேன். 

50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் துறையில் இருக்கிறீர்கள். தொழில்நுட்ப ரீதியாக சினிமா அடைந்திருக்கும் மாற்றங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
 
சினிமா எடுக்க இப்போது பல எளிய வழிகள் வந்துவிட்டன. ஒரு சிறிய டிஜிட்டல் கேமராவை வைத்துச் சினிமா எடுத்துவிட முடியும். இது நல்ல வாய்ப்பு. ஆனால் இன்று சினிமா பொருளாதார எல்லைகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குவதாக ஆகிவிட்டது. சினிமா சுதந்திரமான எழுத்துகள்போல, ஓவியம்போல இருக்க வேண்டும். 

உங்கள் கதையைப் படமாக்குவதற்கும் வேறு ஒருவரின் கதையைப் படமாக்குவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
 
எழுதுவது எனக்குப் பிடித்த விஷயம்தான். ஆனால் எல்லாக் கதைகளையும் நானே எழுதிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலும் மற்றவர்களின் கதைகளைத்தான் படமாக்கியிருக்கிறேன். நாடகங்களை அடிப்படையாக வைத்தும் எடுத்திருக்கிறேன். ஆனால் என் கதைகளைப் படமாக்குவதில் பெரும் சுதந்திரத்தை உணர்கிறேன். 

இப்போதும் இளமையின் உற்சாகத்துடன் சினிமா எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது உங்களை வயதானவராக ஆக்குகிறதா?
 
இல்லை. இந்த அங்கீகாரம்தான் நான் உயிர்ப்புடன் இயங்குவதை உணரச் செய்கிறது. எனக்குக் கிடைத்த இந்த மரியாதைக்காக நான் கேரளாவுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். 

இந்தியப் பயணம் எப்படி இருக்கிறது?
 
நான் வியக்கும் மரியாதைக்குரிய நாடு இந்தியா. இந்தியா எனக்கு நெருக்கமாகவும் அதே சமயம் அந்நியமாகவும் இருக்கிறது. அதன் நகரங்கள், முரண்பாடுகள், பல்வேறு விதமான அதன் வண்ணங்கள் எல்லாம் வசீகரிக்கக்கூடியவையாக இருக்கின்றன. 

-ஜெய்குமார் மண்குதிரை

(13.12.2013 தி இந்து தமிழ்) 

(கார்லோஸ் சாரா, ஸ்பானிய இயக்குனர். Flamenco, Tango, Fados ஆகியவை இவரது முக்கியமான படங்கள். )

Sunday, February 21, 2016

(விஜயா வேலாயுதம் நேர்காணல்) வாசகன் விதை நெல்லைப் போன்றவன்


கோவையின் அடையாளுங்கள் ஒன்று விஜயா பதிப்பகம். அதன் பதிப்பாளர் விஜயா வேலாயுதம், இந்தத் துறையில் ஐம்பது ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். 1978-ம் முதன் முதலாக வாசகர்களுக்கான திருவிழாவை நடத்தியவர். புத்தக விற்பனையாளராக, பதிப்பாளராக மட்டுமல்லாமல் முதன்மையான வாசகராகவும் இருப்பவர். தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பாபசி) விருது பெற்றவர். கோவையில் அவரது புத்தகக் கடையில் வைத்து மேற்கொண்ட நேர்காணலின் சுருக்கம் இது.

முதலில் பதிப்பித்த புத்தகம் எது?

‘புதிய பார்வை’ என்னும் பெயரில் நா.பார்த்தசாரதியின் கட்டுரைகளை வெளியிட்டோம். பிறகு அவரது கவிதைகளை, ‘மணிவண்னன் கவிதைகள்’ என்ற பெயரிலும் சிறுகதைகளை ‘தேவதைகளும் சில சொற்களும்’ என்னும் பெயரிலும் வெளியிட்டோம். பிறகு மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள், ‘ஊர்வலம்’ ஆகிய தொகுப்புகளையும் வெளியிட்டோம்.


முன்னனுபவம் இல்லாமல் எப்படி இந்தத் துறைக்கு வந்தீர்கள்?

முன்னனுபவம் இல்லை; ஆனால் வாசிப்புனுபவம் இருந்தது. முன்பு ரயில்வே ஸ்டேஷன்களில் பழநியப்பா பிரதர்ஸ் புத்தங்களைக் காட்சிக்கு வைத்திருப்பார்கள். மதுரையில் சாமிநாதன், பாரதி புத்தகாலயம் என்ற பெயரில் வைத்திருப்பார். இவையெல்லாம் ஒரு தீப் பொறியாக எனக்குள்ளே விழுந்தது. மற்றபடி ஒரு வாசகனாக நான் எப்படியெல்லாம் புத்தகங்களைத் தேடி அலைந்தேனோ அதை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் இந்தத் தொழிலுக்கு வந்தேன். வாசிப்பு என்றால் ரொம்பவும் உணர்ச்சிவசமாக ஆகிவிடுவேன். ஜெயமோகன், ராஜமார்த்தாண்டன் பற்றி, ‘உயர் அழுத்த மின்சாரம் ஓடும் மெல்லிய கம்பி போன்றவர்’ எனச் சொல்வார். அது எனக்கும் பொருந்தும். இந்த வாசிப்புதான் எனக்கு உயர் அழுத்த மின்சாரம்.


துப்பறியும் நாவலில் தொடங்கி சமூக நாவல் பக்கம் வந்ததாகக் கூறியுள்ளீர்கள். அந்தக் காலகட்டத்தில் பிரபலமாகயிருந்த சரித்திர நாவல் உங்களைக் கவரவில்லையா?

சிறு வயதிலேயே வறுமையைப் பார்த்துதான் வளர்ந்தேன். அதனால் சரித்திர நாவல்களின் பிரம்மாண்டம் என்னை ஈர்க்கவில்லை. சமீபத்தில் ஜெயமோகனின் ‘அறம்’ தொகுப்பில் ‘சோற்றுக் கணக்கு’ என்னும் ஒரு கதை. திருவனந்தபுரத்தில் சாப்பாட்டுக் கடை வைத்திருந்த கெத்தேல் சாகிப் என்பவரைப் பற்றிய கதை. இதைப் படித்தால் சாப்பாடின் முக்கியத்துவம் தெரிகிறது. இந்த மாதிரி கதைகள்தான் எனக்குப் பிடித்திருக்கின்றன.

சுய முன்னேற்ற நூல்களும், உடல் நலன் சம்பந்தப்பட்ட நூல்களும்தான் அதிகமாக விற்பனையாகின்றனவா?

இல்லை. நீங்கள் வாசகர்களிடம் இனம் காட்ட வேண்டும். இங்கு ஒரு அம்மா வந்தார். பழ. கருப்பையாவின் ‘மகாபாரம் மாபெரும் விவாதம்’ என்னும் புத்தகத்தை எடுத்து அவரிடம் காட்டினேன். அதை முழுக்கப் படித்திருக்கிறேன். அந்தப் புத்தகம் என்னைத் தூங்கவிடாமல் செய்திருக்கிறது. அதிலிருந்து, ‘காக்கப்பட வேண்டிய இல்லத்திற்கு வழி விசாரித்துச் சென்று கதவைத் தட்டுவது அறம்’ என்ற ஒரு வரியை எடுத்துக் காண்பித்தேன். சாதரணமான வரிதான். உடனே ‘பில் போட்ருங்க’ என்று சொல்லிவிட்டார்.

புத்தகத்தை அத்தியாவசியப் பொருளாகப் பாவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறீர்கள். ஆனால் இன்றைக்குப் புத்தகங்களின் விலை அதிகமாகியுள்ளதே?

வாங்க வேண்டும் என நினைக்கும் வாசகன் எவ்வளவு விலை இருந்தாலும் வாங்குவான். ரோட்டில் போகும் ஒருவரை மறித்து இந்தப் புத்தகத்தை இலவசமாகத் தருகிறேன் வைத்துக்கொள் என்றால் வாங்குவாரா? படித்துப் பார்த்தால் 50 ரூபாய் தருகிறேன் எனச் சொல்லிப் பாருங்கள் வாங்க மட்டார். அதனால் விலை அதிகம் என்பதில் எனக்கு உடன் பாடில்லை. பதிப்பாளர்கள், விற்பனையாளர்களை ஊக்குவிக்க வேண்டும். லாபம் ஒன்றை மட்டும் நோக்கமாகக் கொண்டு பதிப்பாளர்கள் செயல்படக் கூடாது. எத்தனை ஹோட்டல்கள், எத்தனை ஸ்வீட்ஸ் ஸ்டால் இருக்கின்றன, ஆனால் புத்தகக் கடைகள்?

எழுத்தாளர்களைத் தொடர்ந்து கெளரவுத்து வருகிறீர்கள்…

சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளார்களுக்குத் தொடர்ந்து பாராட்டுக் கூட்டம் நடத்தி வருகிறோம். தி.க.சிவசங்கரன் சாகித்திய அகாடமி வாங்கியபோது மட்டும் விழா நடத்தவில்லை. ஏனென்றால் ‘விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்’ நூலை நாங்கள்தான் வெளியிட்டோம். பொதுவாக எங்கள் நூல்களுக்கு நாங்களே பாராட்டுக் கூட்டம் நடத்துவதில்லை.

இதில் ஒரு சுவையான சம்பவம். நாங்கள் வெளியிட்டிருந்த வண்ணதாசனின் ‘சமவெளி’ சிறுகதைத் தொகுப்பைப் பாரதியார் பல்கலைக்கழகம் பாடமாகத் தேர்வுசெய்தது. அது குறித்து எனக்கு எழுதியிருந்தார்கள். அப்போது நிலைக்கோட்டையில் வண்ணதாசன் ஸ்டேட் வங்கியில் பணியில் இருந்தார். கொஞ்சம் ஸ்வீட் வாங்கிப் போய் அவருடன் பணியாற்றும் எல்லோருக்கும் கொடுத்தேன். அவர்களுக்கு இவர் எழுத்தாளர் என்பதே அப்போதுதான் தெரியும். பின்னால் இங்கு நடந்த ஒரு விருது விழாவில் இதையெல்லாம் விடப் பெரிய விருதை வேலாயுதம் கொடுத்துவிட்டார் என்றார் வண்ணதாசன்.

வாசகர்களுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது?

ஒரு தீவிரமான வாசகன் வந்தால், எனக்கு விதை நெல் கிடைத்துவிட்டதைப் போன்ற மகிழ்ச்சி. நான் எப்படித் துப்பறியும் நாவல் வாசிக்கத் தொடங்கி இந்த இடத்திற்கு வந்தேனோ அதுமாதிரி எங்களால் வாசகர்கள் மாறியிருக்கிறார்கள்; வளர்ந்திருக்கிறார்கள். வாசகர்களை ஒட்டி நானும் வளர்ந்திருக்கிறேன். விற்பனை மட்டுமல்ல; மக்களின் பண்பும் வளர்ந்திருக்கிறது. ஒருத்தர் வாரார். ஆறு புத்தகங்கள் வாங்குகிறார். ஒன்றுக்குப் பில் போட எங்கள் பிள்ளைகள் மறந்துவிடுகிறார்கள். தேடி வந்து கொடுத்துவிட்டுப் போகிறார்.


மக்களின் ரசனையை மாற்ற முடியுமா?

உள்ள வந்துவிட்டால் போதும். ‘நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?’ ‘கார் ஓட்டுவது எப்படி?’ ‘சமையல்’ எது வேண்டுமானாலும் இருக்கட்டும். வாங்கத் தலைப்பட்டுவிட்டால் போதும். தானாகவே மாறிவிடும். ஜிலேபியவே ஒருத்தன் தின்றுகொண்டிருக்க முடியாது. அவனுக்குத் தெகட்டும். அப்போது அவன் தீவிர இலக்கியத்துக்கு வந்துதான் ஆக வேண்டும்.

மு.வ., ஜெயகாந்தன், கண்ணதாசன், நா.பா என உங்கள் ஆதர்ச எழுத்தாளார்களில் ஏன் நா.பா.வை மட்டும் ஏன் பதிப்பித்தீர்கள்?

ஜெயகாந்தன் புத்தகங்களை மீனாட்சிப் புத்தக நிலையம் வெளியிட்டு வந்தார்கள். மு.வ.வின் புத்தகங்களை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டுவந்தது. இதற்கு இடையில் போய் நான் நின்றால் சரி இல்லை. கண்ணதாசன் இங்கு வந்திருந்தபோது, ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்து ‘பப்பளிஷ் பண்ணிக்கோ’ என்று சொன்னார். நான் மறுக்காமல் வாங்கிவைத்துவிட்டு போகும்போது அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன். ஏனென்றால் வானதி திருநாவுக்கரசுதான் கண்ணதாசனின் புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார். அதை வாங்குவது நல்ல பண்பல்ல. நா.பா., தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பிக்காத புத்தகங்களை என்னிடம் தந்து பதிப்பிக்கச் சொன்னார். அதனால்தான் அவற்றைப் பதிப்பித்தேன்.

சமீபத்தில் பதிப்பித்த புத்தகம் எது?

சமீபத்தில் நாஞ்சில் நாடனின் நேர்காணல் தொகுதியைப் பதிப்பித்திருக்கிறோம். விருப்பு, வெறுப்பு இல்லாமல் தன் கருத்துகளை வெளிப்படையாக, துணிச்சலாகச் சொல்லக்கூடியவர். அடுத்தாக ஜெயமோகனின் ‘நூறு நாற்காலிகள். இந்த நூல் மலையாளத்தில் ‘நூறு சிம்மாசனம்’ என்னும் பெயரில் வெளிவந்து லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றன. இப்போது எழுதுபவர்களில் ஜெயமோகன் அளவுக்கு திறமையான எழுத்தாளர் இல்லை எனச் சொல்லலாம். அவரின் பணிவும் திறமையும் என்னை வியக்க வைக்கிறது.

சந்திப்பு: ஜெய்குமார் மண்குதிரை

பைங்கிளிக் காதல்கள்- பிரேமம்

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய், சூர்யா போன்ற தமிழ் சினிமா நாயகர்களின் படங்களுக்குக் கேரளத்தில் நல்ல வரவேற்பும் வெற்றியும் கிடைத்துவருகிறது. விஜய்யின் ஆட்டத்துக்கு கேரளத்தில் ரசிகர்கள் அதிகம். விஜய்யின் படங்களை முன்மாதிரியாகக் கொண்டு மலையாளத்தின் ஜனப்பிரிய நாயகன் திலீபின் படங்கள் உருவாக்கப்படுகின்றன.

அவை பெரிய வெற்றியையும் பெறுகின்றன. திலீபின் சமீபத்திய படங்கள் எல்லாமும் தமிழின் பழைய வெற்றிப் படங்களின் பிரதிகள் எனலாம். தமிழின் குத்துப் பாட்டுக் கலாச்சாரமும் மலையாள ரசிகர்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது. தமிழ் சினிமா மீதான மலையாள ரசிர்களின் இந்த மோகத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம்தான் ‘பிரேமம்’.
மலையாள சினிமாவின் முகம் இன்றைக்கு வெகுவாக மாறியிருக்கிறது. சத்யன் அந்திக்காடு, சிபி மலயில் போன்ற இயக்குநர்களின் அழுத்தமான கதைகள் இன்றைக்குள்ள மலையாள ரசிகர்களுக்குத் தேவையில்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

மேற்சொன்ன இரு இயக்குநர்களின் சமீபத்திய தோல்விகள் மூலம் இதை உணர முடியும். அது மட்டுமல்ல, ‘தட்டத்தின் மறயத்து’, ‘ஒரு வடக்கன் செல்பி’ போன்ற படங்களின் வெற்றி இலகுவான படங்களின் தேவையையும் உணர்த்துகிறது. அதையே உத்வேகமாகக் கொண்டு அல்போன்ஸ் புத்ரன் ‘பிரேமம்’ படத்தை உருவாக்கியுள்ளார்.


தமிழின் புதிய அலை இயக்குநர்களான நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்று குறும்படம் வழியாக சினிமாவுக்கு வந்தவர் புத்ரன். ‘நேரம்’படம் மூலம் மலையாளம், தமிழ் சினிமா உலகிலும் கவனத்தை ஏற்படுத்தியவர். ‘பிரேமம்’ அவருக்குத் துணிச்சலான பரிசோதனைக் களம்..

முழுக்க வணிக வெற்றியை இலக்காகக் கொண்டு இயக்கப்பட்ட படம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதுபோலவே வெளியிட்ட முதல் நாளிலேயே இதுவரையிலான மலையாளப் படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடிக்கவும் செய்திருக்கிறது ‘பிரேமம்’.
பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், கல்லூரிக்குப் பிறகான பருவம் என மூன்று பருவங்களின் காதலைச் சொல்லும் படம். ஜார்ஜின் (நிவின் பாலி) இந்த மூன்று பருவங்களையும் மூன்று நாயகிகள் அலங்கரிக்கிறார்கள்.

கதை என்று எதுவும் இல்லை. காட்சிகளின் கோவையாகவே படம் எடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக முதல் காதல் ஆலுவா ஆற்றின் கரையில் நடக்கிறது. மேரியாக அனுபமா பரமேஷ்வரன் பள்ளிக்குப் போகும் வழியிலும் டியூஷனுக்கு வெளியேயும் வயது வித்தியாசம் இல்லாமல் இளைஞர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

காதலைச் சொல்ல முயல்கிறார்கள். மேரியின் தந்தையிடம் அடி வாங்குகிறார்கள். இந்தக் காட்சிகளில் ஒரே பிரேமுக்குள் இளைஞர்கள் அங்குமிங்குமாக ஓடுகிறார்கள்; குதிக்கிறார்கள்.
ஆல்பங்களின் தொகுப்பு போல மொத்தப் படமும் இருக்கிறது. நிவின் பாலி, நஸ்ரியா நஸீம் நடித்த ‘யுவா’ இசை ஆல்பத்தை இயக்கிய அனுபவம் புத்ரனுக்கு உண்டு. அந்த ஆல்பம் அவருக்கு வெற்றியையும் தேடித்தந்தது. அதன் சாயலை ‘பிரேமம்’படத்திலும் காண முடிகிறது.


மூன்று பருவத்திலும் வரும் நாயகிகள் படத்தை விடவும் பிரபலம் அடைந்திருக்கிறார்கள். மூவரும் புதுமுகங்களாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்ததும் வெற்றியின் அம்சங்களில் ஒன்று.
அனுபமாவின் சுருள் முடி இப்போது கேரள இளைஞர்களின் பேசுபொருள்களில் ஒன்றாக ஆகியிருக்கிறது. அதுபோல சாய் பல்லவியின் முகப் பருவும். சாய் பல்லவி தமிழ்நாட்டுப் பெண். தமிழ்ப் பெண் பாத்திரத்தையே ஏற்றிருக்கிறார். இதுவும் திட்டமிட்ட ஒன்று.

சாய் பல்லவி வழியாக மலையாளிகளின் தமிழ் சினிமா மோகத்தை புத்ரன் நிறைவேற்றியிருக்கிறார். அவர் மூலம் ஏ.ஆர். ரகுமானின் பாடல், இளையராஜாவின் பாடல், தமிழ் வசனங்கள் என அந்தப் பகுதி முழுவும் தமிழ் மணத்தைக் கமழச் செய்திருக்கிறார்.

20 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப் படம் போல, கல்லூரிப் பருவக் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். ஒரு தமிழ்க் குத்துப் பாட்டுக்கு சாய் பல்லவி, நிவின் பாலி இருவரையும் ஆட்டம் போட வைத்திருக்கிறார் புத்ரன். ‘டாடி மம்மி வீட்டில் இல்லை’ பாடல் கேரளத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது புத்ரனின் நினைவில் இருந்திருக்கிறது.

கல்லூரிப் பருவக் காதல்தான் படத்தின் பிரதானமான அம்சம். கல்லூரிப் பேராசிரியையான சாய் மீது மாணவனான நிவினுக்குக் காதல் வருகிறது. இந்தப் பகுதியில்தான் மணியம்பிள்ளை ராஜூ, வினய் போர்ட் போன்ற மலையாளத்தின் முக்கிய நடிகர்களும் வந்து போகிறார்கள். இவர்களின் கூட்டணியில் இந்தப் பகுதி சிறப்பாக வந்துள்ளது.
அல்போன்ஸ் புத்ரன்

தொழில்நுட்ப ரீதியில் மலையாள சினிமா முன்னேறியிருக்கிறது என்பதற்கான சமீபத்திய சான்று இப்படம். ஆலுவா நதிக் கரையில் தொடங்கி, படம் முழுவதையும் அனந்த் சி சந்திரன் தன் ஒளிப்பதிவால் அழகுபடுத்தியுள்ளார்.

பள்ளிப் பருவக் காட்சிகளில் வரும் டீக் கடையில் இருக்கும் ஒவ்வொரு பலகாரத்துக்கும் (பழம் பூரி, முறுக்கு) டைட் க்ளோஸ் வைத்திருக்கிறார்கள். ஒருவகையில் பார்வையாளர்களின் ஞாபகங்களைத் தூண்டுவதற்கு இந்தக் காட்சிகள் உதவக்கூடும். ஆனால், படம் நெடுகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் க்ளோஸ்-அப் காட்சிகள் உறுத்தலாகத் தோன்றுகின்றன.

புத்ரன் ஒரு இசை ஆல்ப இயக்குநர் என்பதால் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் முணுமுணுக்கும் வகையில் பாடல்கள் இருக்க வேண்டும் என்ற முன்முடிவோடு களம் இறங்கியிருக்கிறார்கள்.

“முதிர்ச்சியற்ற வரிகளே போதும் எனத் தீர்மானித்தோம்” எனப் பாடலாசிரியர் சபரீஷ் வர்மா ஒரு நேர்காணலில் சொல்கிறார். ராஜேஷ் முருகேசன் இசை அமைத்திருக்கிறார். ஏற்கெனவே கேட்ட பிரபலமான பாடலின் தன்மையுடன் எல்லாப் பாடல்களையும் அமைத்திருக்கிறார்.

வசனத்தில் இதே சூத்திரத்தைப் பிரயோகித்துள்ளார்கள். இவை எல்லாமும் மலையாள ரசிகர்களுக்குப் புதிய, ரசிக்கத் தக்க அனுபவமாக இருக்க வேண்டும் என்பதைத் திரையரங்கில் எழும் கைத்தட்டல்கள் மூலம் உணர முடிகிறது.

ஆனால், இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் குழுவினர் இப்படியான படத்தை உருவாக்கப்போகிறோம் என்ற தீர்க்கமான, திடமான உணர்வுடன்தான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் நினைத்ததுபோல ‘பிரேமம்’வணிக வெற்றியையும் அடைந்திருக்கிறது. ஆனால், ஆரோக்கியமான மலையாள சினிமா ஒரு பரமபத விளையாட்டென்றால் ‘பிரேமம்’ பாம்பின் தலை மீது நகர்த்தப்பட்ட காய்.
-ஜெய்குமார் மண்குதிரை
(ஜூன் 19, 2105, தி இந்து)

Sunday, December 20, 2015

வடக்கே கன மழை பெய்கிறதுமழை பெய்வதாகக் கூறி
சிதறி ஓடுகிறார்கள்
வீடு திரும்பும் பள்ளிக் குழந்தைகள்

தூறல் ஆரம்பித்துவிட்டதாக
நான்
தப்பி வெளியேறிக் கொண்டிருக்கிறேன்

விருப்பப் பாடலை
ஒலிபரப்பும்
பண்பலைத் தொகுப்பாளினி
வடக்கே கன மழை பெய்வதாகச்
சொல்லிக்கொண்டிருக்கிறாள்

ஆயிரம் துளிகள்
விழுகின்றன
பல்லாயிரம் துளிகள்
விழுகின்றன
என் வீட்டிற்குச் செல்லும்
சாலையை அடைவதற்குள்
லட்சம் துளிகள்
விழுந்து தெறிக்கின்றன

‘அடர்த்தியான மழை’ என்ற
பத்திரிகைச் சொல்
நினைவுக்கு வருகிறது

ஒரே ஒரு துளியை மட்டும்
உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு
பாதுகாப்பாக என் வீட்டிற்குள்
அடைந்து கொள்கிறேன்.

இனி என் தனிமை தீர
பேசிக்கொண்டிருப்பேன்
அந்த ஒரு துளியோடு.
(2009-ல் எழுதிய கவிதை)

Wednesday, November 25, 2015

இரவு மலர்


தீராத தேநீரின்
சிநேகத்தோடு
தொடர்ந்து கொண்டிருந்தது

தெற்கு வீதிக்குள் நுழைந்தோம்

இளைப்பாறிக் கொண்டிருந்த‌
சாலையோர உணவு விடுதியயொன்றில்
களைந்து கிடந்த‌
காலி இருக்கையைப் பார்த்ததும்
தேவதச்சன் என்ற‌ ஆறுமுகத்தின் அங்காடி
இந்தத் தெருவில் இருப்பதாகச் சொன்னாய்

கவிதையைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம்

செண்பவள்ளியம்மன் கோவிலைக் கடக்கும் போது
மொழியின் வறட்சியால்
முற்றுப் பெறாத
எனதொரு கவிதையை
விமர்சித்தாய்

அம்மா மெஸ்சின் திருப்பத்தில்
ஒரு இரவுப்பறவை இடம் பெயர்ந்தபோது
ந‌.பி-யை வாசித்திருக்கிறாயா என்றாய்

என‌க்குச் சிற‌கு முளைத்துக் கொண்டிருப்ப‌தாக‌ சொன்னேன்

ர‌ஜ்னிஷை வாசிக்க‌ச் சொன்னாய்

வ‌க்கீல் தெருவைக் க‌ட‌ந்த‌போது
விடை பெற‌லாம் என்று
நீ மூன்றாவ‌து முறையாக‌ச் சொன்னாய்

நான், த‌ரையில் இற‌ங்கும் விமான‌ங்க‌ளை சிலாகித்தேன்

ர‌ப்ப‌ரும், புளிய‌ ம‌ர‌த்தின் க‌தையும் நாளை த‌ருவ‌தாக‌ச் சொன்னாய்

நாம் பிரிய வேண்டிய‌
ஜோதி ந‌க‌ர் ச‌ந்திப்பு வ‌ந்த‌தும்
விடை பெற‌லாம் என்று
நான் நான்காவ‌து முறையாக‌ச் சொன்னேன்

நீண்ட‌ தியான‌ம் க‌லைத்த‌துபோல‌
கால‌த்தில் இடைவெளி இருப்ப‌தாக‌ச் சொன்னாய்

பிற‌கு கால‌த்தைப் ப‌ற்றியே வெகுநேர‌ம் பேசிக்கொண்டிருந்தோம்

ம‌ல‌ர்ந்திருந்த‌ இர‌வு ம‌ல‌ரை
வெண் நிற‌ வ‌ண்டொன்று
சுற்றிக் கொண்டிருந்த‌து

(2009இல் எழுதியது)

காதல்கள்

காதல் என்னும் உணர்ச்சி விளக்கவே முடியாதது. அந்தத் தீவிரத்தின் உச்சத்தில் உள்ளவர்கள் அதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அதைக் கடந்தவர்கள் சிலர் எதிர்மறையான அபிப்பிராயங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். காதலின் புனிதங்கள், பாசாங்குகள், கற்பனைகள் இவை எல்லாமும் விளக்கத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் அப்பாற்பட்டவை. காதல், ‘சரி, தவறுக’ளுக்கு அப்பாற்பட்டதும்கூட. காதல்கள், அவற்றின் பாசாங்குகளை இயல்பான காட்சிகளின் விவரிக்க முயலுகிறது ‘அருகே’.


2012இல் வெளிவந்த இப்படம் வங்க எழுத்தாளர் சுனில் கங்காபாத்யாவின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. திலீப், சம்ருதா சுனில், மம்தா மோகன்தாஸ், இன்னோசண்ட், வினித் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை, மலையாளத்தின் முன்னணி இயக்குனர் ஷியாம்பிரசாத் இயக்கியுள்ளார்.

சாந்தனு மொழியில் துறை ஆராய்ச்சி மாணவன். முன்பு விரிவுரையாளனாகப் பணியாற்றியவன். மென்மையான உணர்வு கொண்டவன். தன்னுடைய முன்னால் மாணவியான கல்பனாவுடன் அவனுக்குக் காதல். அந்தக் காதல் தொடர்பான பதற்றங்களுடன் எப்போதும் இருக்கிறான். கல்பனா உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்கவள். இளமையின் முழு வனப்பும் அவளின் உடலில், தெத்துப் பல் சிரிப்பில் வெளிப்படுகிறது. சாந்தனுவின் வெகுளித்தனங்களை, மென்மையுணர்வை, அவனது பண்டிதத் பின்னணியைக் கல்பனா ரசிக்கிறாள். சின்னச் சின்னதாக அவனை ஏமாற்றி அவனுடைய பரிதவிப்புகளை ரசிப்பவளாகவும் இருக்கிறாள்.

அவள் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தின் ஒரே மகள். அப்பா அரசு வங்கி ஒன்றின் உயர் அதிகாரி. சாந்தனு பிராமணன் அல்ல. மேலும் அவனுக்கு என்று யாருமே இல்லை. அதனால் இழப்பதற்கும் ஒன்றும் இல்லை. ஆனால் கல்பனா தன் வசதியான வாழ்க்கை, பாசமான அம்மா, அப்பா இவை எல்லாவற்றையும் துறந்து வர வேண்டும். இது சாத்தியமா? அவனுக்குள் கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இவை பலவீனமான ஆண் மனத்தின் பதற்றங்கள். இந்த உறவையே ஆதாரமாகக் கொண்டிருக்கும் சாந்தனு அது உருவாக்கும் தாழ்வு மனப்பான்மையால் காதலில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறான். ஆனாலும் இடையிடையே மனமும் குழம்புகிறது; கேள்வி எழுப்புகிறது. தனக்காக அவள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வருவாளா என அவள் தோழி அனுராதாவிடம் கேட்கிறான். “நீ உண்மையிலேயே என்னை நேசிக்கிறாயா” என்று கல்பனாவிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறான்.இந்தக் காதல் விவகாரங்கள் எல்லாம் தெரிந்திரும் கல்பனாவின் பெற்றோர் கல்பனாவைக் கண்டிக்காமல் கூடுதல் பாசத்துடன் அணுகுகிறார்கள். சமயங்களில் சாந்தனுவையே கட்டிவைப்பதாகச் சொல்கிறார்கள். சமயங்களில் உணர்ச்சிபூர்வமாகப் பேசி அவள் மனத்தை மாற்ற முயல்கிறார்கள். சாதுரியமான நடுத்தரவர்க்க மனநிலையை இப்பாத்திரங்களின் வழியாக இயக்குனர் ஷியாம் பிரசாத் சித்தரித்துள்ளார். இவை கதையின் ஒரு பகுதி. 

இன்னொன்றில் அனுராதா வருகிறாள். அவள் கல்பனாவின் தோழி. விரிவுரையாளர். இருவரது காதலின் சாட்சியாக இவள் இருக்கிறாள். அவர்களின் எல்லாச் சந்திப்புகளிலும் உடன் இருக்கிறாள். அனுராதா இந்தப் படத்தின் மையப் பாத்திரம். எப்போதும் சாம்பல் படிந்த முகத்துடன் இருக்கிறாள் அவள். தனக்கு முன்னே எப்போதும் இருக்கும் ஜன்னல்களின் வழியாக உலகையே ஒரு வேடிக்கைப் பொருளாக்கி வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறாள். அந்த ஜன்னல்களில் காட்சிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. தீண்டாத நீர்ப் பரப்பு, சின்னச் சின்னச் சலனங்களையும் உள்வாங்குவதைப் போல மனிதர்களின் செயல்பாடுகளை அவளால் உள்வாங்க முடிகிறது.

அவளை ‘சேச்சி’ என அழைக்கும் கல்லூரி மாணவன் ஒருவனுக்கு அவள் மீது மோகம். சுற்றிச் சுற்றி வருகிறான். வழி மறிக்கிறான். அனுராதாவின் பக்கத்து வீட்டுக்காரரான நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் அனுராதாவுக்குச் சின்ன சின்ன உதவிகள் புரிகிறார். வாதத்தால் படுத்த படுக்கையாக இருக்கும் தன் மனைவியின் நிலையை அனுதாபமாக்கி அனுராதாவை அடைய நினைக்கிறார்.

அனுராதா இருவரையும் நிராகரித்துத் தன் உலகிற்குள் சுருண்டுகொள்கிறாள். குழந்தைமையின் ஈரம் விலகாத பதின்ம வயதில் அவளது கிராமத்து வீட்டில் வந்து தங்கும் முறைப் பையன் வாக்குறுதியுடன் அவளுக்குள் நுழைந்துவிடுகிறான். உறவுகொள்கிறான். அவனது பிரிவும் ஏமாற்றமும் அவள் ஆளுமையில் தாக்கத்தை விளைவித்துவிடுகின்றன. இளமையின் எந்த வண்ணங்களும் இல்லாமல் இருக்கிறாள். முறைப் பையனின் கடிதத்தை நோக்கி அவளும் அவளது தந்தையும் தனித்து இருக்கிறார்கள்.

இதற்கிடையே கல்பனா ஒரு கார் விபத்தை எதிர்கொள்கிறாள். அவளது உடலும் மனமும் பாதிப்படைகின்றன. காளிதாஸனின் காவியப் பாத்திரமான சகுந்தலாவின் பாதத்துடன் சாந்தனுவால் ஒப்பிட்டுப் பேசப்படும் கல்பனாவின் பாதம் முறிந்துவிடுகிறது. தன்னைச் சந்திக்க வரும் சாந்தனுவைப் பார்க்க மறுத்துத் திரும்பிக்கொள்கிறாள். சாந்தனும் அனுராதாவும் கடற்கரையில் சந்தித்துக்கொள்கிறார்கள். அருகருகே நின்று பேசுகிறார்கள். கல்பனாவைவிட அவள் தனக்கு எழுதும் பதில் கடிதங்களையே தான் நேசித்தாகச் சொல்கிறான் சாந்தனு. கல்பனா கேட்டுக்கொண்டதற்காக அனுராதாதான் அவன் கடிதங்களுக்குப் பதில் எழுதியிருப்பாள். இந்தக் காட்சியுடன் திரைப்படம் முடிவடைகிறது.

(2014 ஜனவரியில் எழுதியது)