வெம்பா


ஒத்தவீட்டு முத்துதான் முதலில் அவ்வுருவைப் பார்த்தான். சம்மாரம் விலக்கில் அசைந்துகொண்டிருந்தது. ஒரு மனிதனாக உருவம்கொள்ளத் தொடங்கிப் பிறகு புகைபோல நிலவொளியில் மங்கிக்கொண்டிருந்த அந்நிழலுருவைக் கண்டு சற்றுப் பதற்றமடைந்த முத்து, வீட்டு நிலையில் செருகியிருந்த பேட்டரி லைட்டை எடுத்துக் கொண்டு திரும்பினான். அதற்குள் அது அந்தச் சாலையிலிருந்து விலகிச் சென்றிருந்தது. தொலைவிலிருந்த வேலிச்செடிகள் சிறு சுழல் ஒன்றில் சிக்கி லேசாக அசைந்து ஓய்ந்ததைக் கண்டதும் அது காற்றினுள் ஒளிந்துகொண்டதாகக் கற்பிதம்கொண்டான். அதற்குத் தோதாகப் பழங் கதைகளின் பெருங்கொத்தை அசைத்துப் பார்த்தான். தேடலில் தீவிரமடைந்த அவன் மேற்குப் பக்கமாக பேட்டரி அடித்தான். வெட்டக் கரிசலுக்கு அப்பாலிருந்த சிறிய கருவேலமொன்றும் இலந்தப் புதரும் கண்விழித்துப் பார்த்தன. ‘‘அங்கிட்டு அரமணக்காரோட மேகாட்டுப் புஞ்சதான்’’ என முணுமுணுத்துக்கொண்டான். வீட்டிற்குள்ளிருந்து லட்சுமி அழும் சத்தமும் அதைத் தொடர்ந்து பஞ்சவர்ணத்தின் பேச்சரவமும் கேட்டன. சார மடிப்பினுள் செருகியிருந்த பீடியை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டே அவ்வுருவம் பற்றிய தேடலிலிருந்து விலகிப் பஞ்சவர்ணம் பற்றியும் கூனன் பற்றியும் யோசிக்கத் தொடங்கினான்.

தன் தொழுவத்திற்குள் புகுந்துவிட்ட கட்டுவிரியனை விரட்டிச் சென்றபோதுதான் மாயகிட்ணன் அரண்மனைக் களத்தருகில் அவ்வுருவைக் கண்டான். அதற்குள் கட்டுவிரியன் ஏதோ பொந்திற்குள் பதுங்கிக்கொண்டது. காவி நிறமுடையதாகத் தோன்றிய அவ்வுருவம் பால் தேவர் பம்புசெட்டிற்குப் பின்னே இருளுக்குள் புதைந்துபோனது. பெரும் குரலொன்றை அக்கரிசல் வெளிக்குள் எறிந்து பார்த்துத் திரும்பினான். இன்னும் வயதுக்குவராமலிருக்கும் அரண்மனைக்காரரின் பித்துப்பிடித்த மூத்த பெண்பிள்ளையாக இருக்குமென யூகித்தான். முற்றம் தெளிப்பதற்கு முன்பே எழுந்து களத்தருகில் அவள் அலைவதைப் பலமுறை மாயகிட்ணன் பார்த்திருக்கிறான். அரண்மனைக் களத்தில் கிடந்த நாய்கள் அவ்வுருவைக் கண்டு குலைத்தோய்ந்ததை அவன் பொருட்படுத்தவில்லை. சானகியைப் பார்ப்பதற்கு அவனுக்கு இது தான் சமயம். நேற்றைய திளைப்பை நெஞ்சில் ஊரவிட்டபடி பூரிப்புடன் கோனார் தெருவுக்குள் நுழைந்தான்.




வாடி மாடுகளோடு பழக்கங்கொண்டோடிவிட்ட ராக்கப்புவீட்டுக் காளையைத் தேடிச் சீனாங்கம்மாப் பக்கம் சென்ற கந்தகுப்புவும் செவ்வாழையனும் திரும்பிக்கொண்டிருந்த பொழுது துலங்கும்வேளையில்தான் காவிநிறமுடைய மேலாடையோடு கிடந்த அவ்வுடலைக் கண்டார்கள். அதைச் சுற்றி நின்றிருந்த மந்தை நாய்களை விரட்டிவிட்டு அவ்விருவரும் ஊருக்குள் தாக்கல் சொல்லச் சென்றனர். அவ்வூரின் அந்த முதல்செய்தி, நுழைவிலிருந்த பகடையர் வீடுகளுக்குள்ளும் பறையர் மடத்திற்குள்ளும் புகுந்து, விழித்துக்கொண்டிருந்த பள்ளர் வீதி வழியாக விரிந்துகிடக்கும் கோனார் தெரு முழுவதும் பரவி தேவர்மார், ஆசாரிமார், சாயுபுமார் வீடுகளையடுத்துப் பிள்ளைமார் குடிகளுக்குள் கிசுகிசுக்கப்பட்டு இறுதியாக ஊர்க் கடைசியில் இருந்த சாமிமார் வீடுகளையடைந்து தீவிரம் கொள்ளத் தொடங்கியது.



ஊரின் நடுவிலிருந்த அரண்மனை இன்னும் விழித்துக்கொள்ளாமலிருந்தது. அவ்வுடலை ஊருக்கு வெளியே சின்னக் கம்மாவுக்கு மேற்கே கிடத்திவைத்திருந்த இளவட்டமாரில் இருவர் அரண்மனைக்குத் தாக்கல் சொல்லச் சென்று அரண்மனைக்காரர் இன்னும் எழவில்லையெனத் தட்டுப்பட்ட பண்ணையாட்களிடம் சொல்லிவிட்டுத் திரும்பியிருந்தனர். அதற்குள் வைகை எதுனப்பட்டியிலிருந்து திரும்பியிருந்தது. அளத்துக்குக் கூலியாட்களை ஏற்றிச் செல்லும் பேருந்தொன்று சின்னக் கம்மா விலக்குவரை ஊர்ந்து கொண்டே திரும்பியது. காட்டு வேலைகளுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்த பெண்கள் களவெட்டியையும் கொட்டானையும் காரியாலயத்தில் வைத்துவிட்டுக் கூடிக் கூடிக் கிசு கிசுத்துக்கொண்டிருந்தனர். ஆர்வங்கொண்டோடி வந்த குழந்தைகளை அவர்களுடைய ஆத்தாமார் முந்தானைகளுக்குள் பொத்தி அழைத்துச் சென்றனர். கிராம்சுக்குத் தகவல் கொடுக்க வேண்டுமெனச் சொல்லிக்கொண்டேயிருந்த தலையாரியை வெவரக் கோனாரும் பால் தேவரும் தடுத்துவைத்திருந்தனர்.

புஞ்சையில் கிடந்தபோது அந்த உடலைக் குதறி மூர்க்கமடைந்திருந்த மந்தை நாய்களை அடித்துப் புதைப்பதற்காக முத்துவும் மாயகிட்ணனும் இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோதுதான் காரியாலம் முன் கூடியிருந்த பெண்களை விலகச் சொல்லிவிட்டு அரண்மனைக்காரர் கூட்டத்திற்குள் நுழைந்தார். உடல்மீது போர்த்தப்பட்டிருந்த சாக்குப்பை விலக்கிக் காட்டப்பட்டது. அடையாளம் காண முடியாதபடி சிதைந்திருந்த அவ்வுடலைக் கண்டு அசூயையடைந்து மேல்துண்டால் முகத்தைத் துடைத்தவாறு, ‘‘போலீசுக் கேசா இருக்கும்போலிருக்கு. கிராம்சுக்குத் தாக்கல் சொல்லிருவோ’’ எனச் சொல்லிக்கொண்டே காரியாலயத்தை நோக்கிச் சென்றார் அரண்மனைக்காரர். அவருடன் நகர்ந்து செல்லும் கூட்டத்திலிருந்து விலகித் தலையாரி மட்டும் போஸ்ட் மாஸ்டர் லெக்குவன் வீட்டுப் பாதையில் கலந்தார். அந்த உடல் எல்லோருக்கும் பேசுபொருளானது. ராக்கப்பு ஒன்றைச் சொன்னார். சீமைச்சாமி அதை மறுத்தார். கணக்குப் பிள்ளைக்கும் லெப்டுக்கும் வாய்த் தகராறானது. முன்பு நடந்த கொலைகளும் வன்முறைகளும் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

பொழுது துலங்கிக்கொண்டிருந்த அவ்வேளையில்தான் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றூர்களின் தலைநகர் போலிருக்கும் அச்சிறிய நகரின் புதுத் தேயிலை நீரைப் பருகிக்கொண்டிருந்தான் ஆறுமுகம். கடை வீதியிலிருந்த கட்டடங்கள் ஒவ்வொன்றும் ஒளியால் வடிவமடைந்துகொண்டிருந்ததை ஒவ்வொரு மிடறுக்கிடையிலும் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்த அவன் எதிரே இருந்த ஒரு குப்பைத் தொட்டியும் அதனருகே கிடந்த நாயும் துலக்கமடைந்ததும் காணாத ஒன்றைக் கண்டதுபோன்ற உணர்ச்சியிலாழ்ந்தான். திடீரெனத் தோன்றும் உணர்ச்சி ஒன்றால் நிர்ப்பந்திக்கப்பட்டவன்போல் புறப்பட ஆயுத்தமான பேருந்தொன்றில் ஏறி ஜன்னல் ஓரமாக அமர்ந்தான். அந்தத் தேநீர்க் கடைக்கு அருகிலிருந்த பெரிய புளிய மரம் தன் பிரக்ஞையிலிருந்து தப்பிய விந்தையை அவன் நினைத்துக்கொண்டிருந்தபோது கருப்பு வெள்ளைக் காட்சிகளிலிருந்து அந் நகர் வெவ்வேறு வண்ணங்களாய் உருவம்கொள்ளத் தொடங்கியது.

அந்தப் பேருந்து வைப்பாற்றுப் பாலத்தைக் கடந்து இருபுறமும் பச்சையாய்ப் பூத்துக்கிடக்கும் ஒண்ணாம் மழை பெய்த கரிசல் காட்டை ஊடுருவிச் செல்லும் சாலைக்குள் நுழைகிறது. வரத்துப் பறவைகளின் பேச்சுச் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்கிறான் ஆறுமுகம். தான் ஊன்றிய மிளகாய்ச் செடி தளிர்த்திருப்பதை ஒரு பெரிய மனுஷி வாஞ்சையோடு ஸ்பரிசித்துப் பார்க்கிறாள். அருகே முளைத்துவரும் களையைப் பிடுங்கி எறிகிறாள். பக்கத்து நிலத்தில் ஆறு முகத்தின் ஆச்சியும் லட்சுமி அத்தையும் செடிகளுக்கு உப்புவைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆமணக்குச் செடியின் நிழலில் தாத்தாச் செடிகளிடம் துட்டுகேட்டு வீழ்த்திக்கொண்டிருந்த ஆறுமுகம் யாரும் கவனிக்காததை உணர்ந்ததும் நகர்ந்து புஞ்சையின் குப்பைமேட்டில் ஓடிக் கிடக்கும் கிசுமுசுக் கொடியைக் கிளறத் தொடங்குகிறான். ‘‘ஏலே பூச்சிபட்ட கிடக்கப்போதுடா ’’ என அவன் ஆச்சி குரலொன்றை எழுப்பவும் பின்வாங்கி மறுபடியும் தாத்தாச் செடிகளிடம் துட்டுகேட்டுத் துட்டு கேட்டுச் சோர்வடைகிறான். வள்ளியும் கணேசனும் அங்கே வருகிறார்கள். ஆண்டி ரெட்டியார் ஓடையில் வெள்ளரிப் பிஞ்சு பறிக்கலாமென்கின்றனர். ஆச்சியின் பார்வையிலிருந்து சாதுர்யமாகத் தப்பும் மூவரும் ஓடைக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதைக்குள் ஒட்டுப்புற்களைப் பறித்து எறிந்துகொண்டே செல்கின்றனர்.

ஓடையில் கால் நனைத்து வெள்ளரிக் கொடிகளை அடைகிறார்கள். எதிர்பார்த்திராத அளவுக்கு இளம் பிஞ்சுகள் நிறையக் கிடக்கின்றன. ஆளுக்கொன்றைக் கடித்துப் பார்த்து அவர்களுக்குள்ளே காரணமறியாமல் சிரித்துக்கொள்கிறார்கள். ஆறுமுகமும் கணேசனும் பறிக்கும் எல்லாவற்றையும் வள்ளிக்கே கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். சந்தோஷம் தாளாத அச்சிறுமி தன் மேல்சட்டையைக் களைந்து அதற்குள் வெள்ளரிப் பிஞ்சுகளைக் கட்டிக் கொள்கிறாள். கணேசன் வெளிக்குப் போகலாம் என்கிறான். ஆறுமுகமும் வள்ளியும் வர மறுக்கிறார்கள். கணேசன் சென்ற பிறகு உள்ளங்கைத் தேனில் மூக்குத்திப் பூ வைத்தது போலிருக்கும் வள்ளியின் இளம் மார்பைக் கிள்ளிவிடுகிறான் ஆறுமுகம். மிதமான ஒலியெழுப்பி அவ்வலியைக் கடக்கும் அவள் துட்டுமிட்டாய் போலிருக்கும் அவன் மார்பைக் கிள்ளுகிறாள். ஆறுமுகம் அவளின் இன்னொன்றை அழுந்தக் கிள்ளி வக்கணை காட்டுகிறான். பதிலுக்கு அவளுக்குக் கிள்ளக்கொடுக்கிறான். பிறகு அது ஒரு விளையாட்டாகிறது. இருவரும் ஒருவரையொருவர் கிள்ளி மகிழ்கிறார்கள். ஒருவரையொருவர் துரத்தி ஒருவர்மீது ஒருவர் விழுந்து புரளுகிறார்கள். ஆதியில் திட்டமிடப்பட்ட ஒன்றை நிறைவேற்றும் வேட்கைகொண்ட ஆறுமுகத்தின் விரல்கள் வள்ளியின் உடலில் வசப்படும் பாகங்களிலெல்லாம் ஊர்ந்து மூர்க்கமடைகின்றன. அச்சிறிய மனிதர்களின் உடல்கள் ஆணுடலும் பெண்ணுடலுமாகப் பெரும் மரமொன்றின் விழுதுகளில் ஊஞ்சலாடத் தொடங்குகின்றன. கால் கழுவிவிட்டுக் கரையேறும் கணேசனும் விரைவாக வந்து அவ்விளையாட்டில் கலக்கிறான். இம்முறை விளையாட்டு வேறொரு வடிவத்திற்கு மாறுகிறது. மூவரும் சுற்றிச் சுற்றிப் பறக்கிறார்கள். நீர் தேடி வந்த பறவைகள் பதற்றம்கொள்கின்றன. கரிசல் நிலத்தில் வெடித்துச் சிதறும் ஆமணக்கு முத்துகள்போல் சிறுவர்களின் சிரிப்பாணிகள் ஓடைக் கரையெங்கும் விழுந்து தெறிக்கின்றன. ‘‘அப்பிடியென்ன சிரிப்பாணியோ’’ என வேலிச் செடி நிழலுக்குள் பதுங்கியபடி அந்தச் சிரிப்பாணிகளைச் சேகரித்துக்கொள்கிறார்கள் ஓடை தேடிவரும் ஆட்டிடையர்கள்.

அவ்விளையாட்டின் ஒரு முனையை ஆறுமுகமும் மறு முனையைக் கணேசனும் பிடித்துக்கொண்டோட காலமும் வள்ளியும் அவற்றிற்கிடையில் அகப்பட்டுக்கொண்டனர். இரு முனைகளின் தீவிரமும் தளரத் தொடங்கியபோது தப்பிச் சென்று ஓடக்கரையில் அமர்ந்து இழுத்துவிட்ட வேலிக் கருவையின் கிளைபோல் மெதுவாக இயல்புக்குத் திரும்புகிறாள் வள்ளி. காலம் நிறமாறிக் கலைந்துகொண்டிருக்கிறது. இளைப்பாறலுக்குப் பின் வள்ளியின் கட்டிலிருந்து தவறிச் சிதறிய பிஞ்சுகளைக் கணேசனும் ஆறுமுகமும் சேகரித்துக் கொடுக்கிறார்கள். அவர்கள் மூவரும் ரோட்டுப் பாதைக்கு ஏறும்போது மயில்வாகனம் சூரங்குடியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தது. வீடு திரும்பிக்கொண்டிருக்கும் மேய்ச்சல் விலங்குகளின் கும்மறிச்சத்தால் பாதையெங்கும் புகைபோல் புழுதி அடர்கிறது. வள்ளி வீட்டுக்குச் செல்லும் தெக்குத் தெரு விலக்கில் அவள் பிரியும்போது பறித்துவைத்திருந்த பல இதழ்களுடைய கேந்திப் பூவை அவளுக்குக் கொடுக்கிறான் ஆறுமுகம். கணேசனும் சங்குப் புஷ்பமொன்றைக் கொய்தளிக்கிறான். சிரிப்பாணி பொங்க இரண்டையும் வாங்கி வெள்ளரிக் கட்டுக்குள் திணித்துக்கொள்ளும் அவள் ஆளுக்கொரு பிஞ்சை உருவிக்கொடுக்கிறாள். கணேசன் அதை டவுசர் பைக்குள் சேமித்துக்கொள்கிறான். ஆறுமுகம் வாங்கியவுடனே அதன் சொங்கைக் கையால் துடைத்தழித்துக் கடித்துப் பார்க்கிறான். அதில் பாம்பேறியிருக்கிறது.



தன் குறியில் மயிரிரண்டு அரும்பியிருப்பதை ஆறுமுகம் கணேசனிடம் சொல்லிக்கொண்டிருந்த நாளின் பிற்பகுதியில் வள்ளிக்குப் பாலும் பழமும் ஊட்ட ஆறுமுகத்தின் அம்மாவும் ஆச்சியும் தெக்குத் தெருவுக்குப் போயிருந்தார்கள். அதற்குச் சில வருடங்கள் முன்பே ஆறுமுகத்தோடும் கணேசனோடும் வெளிக்குப் போவதை நிறுத்தியிருந்தாள் வள்ளி. அவள் சமைந்த இரண்டாம் நாள் பல்லாங்குழி விளையாட அரண்மனைக் களத்தில் முத்தெடுத்து கொடுத்து வரச் சொன்னாள் ஆறுமுகத்தின் ஆச்சி. களத்தருகில் எண்ணி எழுபது முத்துகளை ஆறு முகம் சேமித்துக்கொண்டிருந்தபோது அவன் வரக் கூடாதென வேண்டிக்கொண்ட கணேசனும் சேர்ந்துகொண்டான். திரும்பிவரும் வழியில் தனியாக எடுத்துவைத்திருந்த ஆறு முத்துகளை ஜக்கம்மாள் கோயில் திட்டில் தாயத்திற்காக உரசிக்கொண்டனர் இருவரும். மூக்கையா மாமா விறகுக் கட்டைப் பிரித்துக்கொண்டே ‘‘யாரு மருமகப் புள்ளயா’’ என லேசாக ஏறிட்டுப் பார்த்தார். வள்ளியின் அம்மா முத்துகள் நிறைந்த ஜருகப் பையை வாங்கிச் சென்றாள். வள்ளியை அறைவீட்டிற்குள் வைத்திருந்தனர். இருவர் கண்களும் அவளைத் தேடிக் களைத்துத் தட்டுப்படாத அவ்வுருவை நினைவில் துழாவி நிகழ்வுக்குத் திரும்பின.

கட்டாப்பாடு ஆச்சிக்கு வீடு காண்பிக்கச் சென்ற பத்தாம்நாள் தான் ஆறுமுகம் அவளைக் கண்டான். உடல் மெலிந்திருந்தது. ஆனாலும் பவுசாக இருந்தாள். புழுதி கிளறி எப்போதும் அழுக்கேறிக் கிடக்கும் அவள் பாதங்கள் அன்று மனோகரன் வீட்டு மொசக்குட்டி போல் முழுப் பாவாடைக்கு வெளியே தலைகாட்டிக்கொண்டிருந்தன. அச்சுவெல்லக் கட்டியைப் பதுக்கிக்கொண்டிருப்பதுபோலக் கன்னங்களில் சதை பூத்திருந்தது. சூவைக் கடித்தத் தடம்போலிருந்த அவள் மார்பு குழவி கொட்டியது போன்ற தோற்றம் கொண்டிருந்தது. அவள் சோட்டுப் பிள்ளைகள் கூடியிருந்த அறைவீட்டில் முணுமுணுப்புகள் கேட்டுக்கொண்டிருந்தன. அவை தன்னைப் பற்றியதாயிருக்குமென்னும் சந்தோஷத்தில் ஆறுமுகம் லயித்திருந்தான். சின்ன கேலிச் சிரிப்பாணிகளைப் போல் கணேசன் வாங்கிக்கொடுத்த பால் தேவர் வீட்டுச் சோவிகள் அவ்வறையில் ஒலியெழுப்பிப் புரண்டுகொண்டிருந்தன.

உப்பளத்துத் துரைமார் தொடர்பில் சீமைக்கு அவுரி அனுப்பும் வியாபாரத்தைப் பெற்றிருந்தான் ஆறுமுகம். அதற்காக ஊர் ஊராகச் சுற்றிக் களைத்திருந்தான். அவனுக்காக வீட்டுத் தாழ்வாரத்தை இடித்துக் கடை வைத்துக்கொடுத்திருந்தாள் அவன் ஆச்சி. அன்று அவுரி எடுப்பதற்காக ஆறுமுகம் தெக்குத் தெருவுக்குச் சென்றான். அவன் ஆச்சி சொற்களள்ளித் தூற்றியிருந்த மூக்கையா மாமா வீட்டுப் படலை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்து குரலெழுப்பிப் பார்த்தான். அந்த மோசமான பிணக்கிலிருந்து இரு குடும்பமும் மீண்டுகொண்டிருந்ததன் ஒலிவடிவமாக அக்குரல் சிறு சுழியாகிக் காற்றில் கரைந்தது. ஆள் அரவமின்றிக்கிடந்த அவ்வீட்டின் தொழுவத்திலிருந்து ஓடிவந்த செவலை நாய் வாலாட்டி நின்றது. உள் பக்கம் தாழிட்டிருந்த கம்பிக் கதவை விலக்கி ஈரம் தேடும் சாரை போல் நுழைந்தான். அவன் நினைத்ததுபோலவே வள்ளி அங்கனக் குழியில் நின்றிருந்தாள். அவள் ஏதோ ஒன்றைச் சொல்வதற்கு முன்பே அரவமுணர்ந்த அச்சிற்றுருயிர்போல் ஊர்ந்து திரும்பினான். இரு செம்புத் தண்ணீரால் நனைந்திருந்த அவ்வுடலைத் தழுவியிருந்த மஞ்சள் நிறப் பாவாடையின் சின்னக் கருப்பட்டி வட்டும் நனைந்துகிடந்த திமிர்ந்த வெள்ளரிப் பழங்களும் அவனைப் பிரக்ஞை இழக்கச் செய்தன. படலைச் சாத்திவிட்டுத் திரும்பும்வரை காலத்தில் நிச்சயமான ஓர் இடைவெளியை உணர்ந்தான். மாசி மாதக் கரிசல் நிலம்போலானது உடல். எங்கும் கொடிகள் ஓடி ரத்தம் பூத்து வியர்வைத் துளிகள் உதிரத் தொடங்கின.

தன்னை உன்மத்தம்கொள்ளும் இவ்வுடல் கணேசனுக்காகத் திறந்து கிடந்ததைக் கடக்கத் திராணியற்றவனாய் இருந்தான் ஆறுமுகம். அந்தக் கருப்பட்டி வட்டும் வெடித்த வெள்ளரிப் பழங்களும் கணேசனின் கைகளுக்குள் அடங்கியதை நினைக்கும்போதெல்லாம் இயலாமையாலும் புறக்கணிப்பாலும் பீடிக்கப் பட்டுத் தவித்தான். இந்தத் தொடுப்பை முதலில் மாயகிட்ணன்தான் சொன்னான். அவன் முத்துவின் கூட்டுக்காரன் என்பதால் அதை நம்ப மறுத்திருந்தான் ஆறுமுகம். அவனுக்கும் கணேசனுக்கும் ஏற்கனவே பகை இருந்தது. பெண்கள் ஒதுங்கும் சின்னக் கம்மாவுக்குத் தெற்கே வள்ளியையும் கணேசனையும் கண்டதாக ஊர்மடத்தில் பேசிக்கொண்டனர். ‘‘ஏலே ஏதுங் கள்ளச் சோலியா?’’ என வேட்டிக்குள் புகுந்த சூவையைத் தட்டிவிட்டபடியே பிள்ளையார் கோயில் திட்டில் உட்கார்ந்திருந்த வெவரக் கோனார், வண்டி மாடுகளைக் கழுவவந்த கணேசனிடம் கேட்டதை வெறும் எடக்கு என்று தான் அப்போது நினைத்திருந்தான் ஆறுமுகம்.

வள்ளி காணாமல்போன நாளின் அந்தியில்தான் அவள் கணேசனோடு சென்றிருந்தது ஆறுமுகத்துக்குத் தெரியவந்தது. அதையும் முத்துதான் சொன்னான். எண்ணி ஏழு கிழமை எங்கிருந்தார்களென்று யாருக்கும் தெரியவில்லை. மூக்கையா தேடிச் சலித்தான். ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஆறுமுகத்தின் ஆச்சியும் தெரிந்த இடங்களுக்கு ஆளனுப்பிக்கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு உள்ளூரச் சந்தோஷம்தான். அதற்கு ஒரு மாதம் முன்பு ஆறுமுகத்தின் அம்மா செத்து வருசம் கழிந்ததும் அவர்கள் வள்ளியைக் கேட்டுப் போயிருந்தார்கள். ஐந்தாறு தலைமுறையாகத் தொடரும் ஆறுமுகத்தின் இளப்பு நோயைக் காரணம் சொல்லிப் பெண்தர மறுத்திருந்தார் மூக்கையா. கட்டாப்பாடிலிருந்து ஆச்சி அழைப்பின்பேரில் மூக்கையாவின் சாதிசனமெல்லாம் வந்தது. போத்தித் தேவரும் கணக்குப் பிள்ளையும் நைச்சியம் பேசினார்கள். ‘‘அவுக ஆத்தாள மாரி ஏம்புள்ளயு சீக்காளிக்கு வாக்கப்பட்டு நாண்டுட்டுச் சாகவா’’ மூக்கையாவின் இந்த வார்த்தைக்குப் பதிலேதுமற்று எல்லோரும் கலைந்தார்கள்.

மறுநாள் ஆறுமுகத்தின் ஆச்சி பஞ்சாயத்தைக் கூட்டினாள். மூக்கையாவிடம் ஒத்தியில் கிடக்கும் அஞ்சு குருக்கம் புஞ்சையையும் இப்போதே திருப்பித் தரச் சொன்னாள். மூக்கையா இரண்டு வெள்ளாமை முடிய வேண்டுமென மறுத்தான். கட்டாப்பாடிலிருந்து அவன் பஞ்சம் பிழைக்க வந்த கதையை எடுத்தாள் அவள். மூக்கையா அவள் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கும் “யார வக்கத்தவன்னு சொல்ற, மொறைக்கு அக்காளேன்னு பாக்கே, தேவுடியா முண்ட, ஓ அவுசாரித்தனத்த எடுத்தே. . .” என்னும் வார்த்தையைக் கூட்டத்தில் எறிந்தான். பெரும் சினங் கொண்ட ஆறுமுகம் மூக்கையாவைத் தாக்கப் பாய்ந்தான். எந்தப் பின் வாங்கலும் இல்லாமல் ஆறுமுகத்தை வெறித்தபடி மூக்கையா நின்றிருந்தான். ஆறுமுகத்தின் உடல் இயலாமையில் அதிரத் தொடங்கியது. இளவட்டமார் அவனைப் பிடித்துக்கொண்டனர். அதிகமும் சினேகமில்லாத மேலத் தெரு பொன்னையா கூட மூக்கையாவின் சொற்களால் வெகுண்டெழுந்தான். காரியாலயமே சத்தக் காடானது. ஆனால் கணேசன் எந்தச் சலனமுமின்றி அங்கே சிதறிக் கிடந்த வடிவான வேப்பம் பழங்களைப் பிதுக்கிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்ததும் மேலும் அதிர்ந்து பின்வாங்கினான் ஆறுமுகம். மூக்கையாவுக்குச் சாதகமாகத்தான் அந்தக் கூட்டம் கலைந்தது. இரவெல்லாம் ஊமத்தம் பூவை வாட்டி நுகர்ந்துகொண்டே கொல்லையில் கிடந்தான் ஆறுமுகம். ஒப்பாரிப் பாடலொன்றைப் போல் தாழ்ந்த குரலில் எதையெதையோ புலம்பிக்கொண்டே அவன் ஆச்சி கிண்டிக் கொடுத்த வெள்ளப்பூடுக் களியைத் தின்று இளப்பு இறங்கியதை அறியாமல் உறங்கிப்போனான் அவன்.

கணேசனையும் வள்ளியையும் திருச்செந்தூரிலிருந்து மீட்டு வந்திருந்தனர். அவர்கள் கல்யாணம் கட்டிக் கொண்டார்கள் என்றும் தாலியை அறுத்தெறிந்துதான் மூக்கையா கூட்டிவந்தான் என்றும் மடத்தில் எழுந்த பேச்சுகள் ஆடுபுலி ஆட்டங்களின் இடைவேளைகளைச் சுவாரஸ்யப்படுத்தின. ஆனால் கேந்திப் பூவைப் போல் பல அடுக்குகள் கொண்ட அவள் உடலின் ஒவ்வொரு இதழும் கணேசனுக்கு அடங்கியதை நினைத்து நினைத்து அதிலே வீழ்ந்து கிடந்தான் ஆறுமுகம். அவ்வெண்ணம் உயரும் அக்கணம் இரை தீண்டா நாகத்தின் பொந்தொன்றைப் போல் அச்சமூட்டக்கூடியதாக இருந்தது அவனுக்கு.

அவர்கள் திரும்பியிருந்த மறுநாள் கணேசனோடு மல்லுக்கட்டப்போயிருந்தான் ஆறுமுகம். கணேசன் பனங்காட்டு அருகில் மாலையம்மாள் கோயிலில் இருந்தான். மோக்காலிருந்த மாடுகளை விலக்கி நிழலில் கட்டிவிட்டுச் சீவிவிடப்பட்டிருந்த அவற்றின் கூர்மையான கொம்புகளைப் பதம் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் அவனை நோக்கி வந்துகொண்டிருந்த ஆறுமுகத்தைக் கண்டான் கணேசன். “என்ன ஆறுமோ இங்கிட்டென்ன சோலி?” என வெகு சாதாரணமாக ஆறுமுகத்தை எதிர்கொண்டான் அவன். பனைமரம் போல் உறுதியான கணேசனின் மேலாடையில்லாத உடல் ஆறுமுகத்தின் இயலாமையை உணர்த்தியது. எப்போதும் மேலாடைக்குள் மறைந்திருக்கும் பெண் உடல் போன்ற மென்மையான தன் உடல் பற்றிய தாழ்வு மனப்பான்மை எழுந்தவுடனே சட்டென்று மரவட்டைபோல் தனக்குள்ளே அடைந்துகொண்டான் ஆறுமுகம். “இல்ல இங்கிட்டு கீகாட்டுப் புஞ்சைக்கு வந்தே, ஆரோ வேத்தாளோன்னு நெனச்சே” என வரப்பு மேட்டில் சுருண்டுகொண்ட நத்தைக் கூடொன்றை விலக்கிவிட்டு அமர்ந்தான். “சேரி, ஆறுமோ சேக்கப்புட்ட சொல்லிருக்கே எறக்கிவச்சுருப்பா பனங்காட்டுச் சேவபோமா?” என அச்சுவையைச் சொற்களுக்குள் பதுக்கிவைத்திருப்பதைப் போலத் தணிந்த குரலில் சொன்னான் கணேசன். இருவரும் பனங் காட்டிற்குச் சென்று தனிப் பதநீர் குடித்து அந்தியில் திரும்பினார்கள். அங்கே மஞ்சனத்தி மரத்துக்கடியில் மயங்கிக்கிடந்த அவ்வேளையில் இருவருக்கும் இடையிலான வார்த்தைகளில் வள்ளி பற்றி ஒரு சொல்கூட எழவில்லை. ஆனால் பனங்காட்டு நரிகளையும் ஏமாற்றிடும் கானல் நதிபோல் அதற்கான எத்தனிப்புகள் அவ்வுரையாடல்மீது ஓடிக்கொண்டிருந்தன. சிறுபிள்ளைகளின் விளையாட்டால் கலைந்த வீட்டை ஒழுங்குசெய்வதுபோல் இரு வாரத்திற்குள் எல்லாம் அதனதன் இடத்திற்குத் திரும்பிவிட்டிருந்தன. ஆறு முகம்தான் அவற்றை எதிர்கொள்ளத் திராணியற்றவனாய் இருந்தான்.

திருநெல்வேலி மேலப்பாளையம் அடிமாட்டுச் சந்தையில் கீகாட்டு மாடுகள் பலவற்றைக் கைமாற்றியதன் மூலம் பெரும் தொகையைக் கமிசனாகப் பெற்றிருந்தான் கணேசன். வீட்டை எடுத்துக்கட்டினான். பெரிய கம்மா பக்கம் நிலங்களையும் வாங்கினான். “கைல நல்லா காசு பொலங்குது” என்னும் ஊரின் வார்த்தையில் புளகாங்கிதமடைந்திருந்த கணேசன் இப்போது வள்ளியிடமிருந்து முழுவதும் விலகிப் போயிருந்தான். ஆனால் ஆறுமுகத்துக்குத் தொடுப்பு வந்திருந்தது. கணேசனைத் தேடிக்கொண்டு போனபோதுதான் யாருமில்லா வீட்டிலிருந்த அவனுடைய தங்கை லெக்கம்மாள் வேறொரு புதிய வடிவத்தில் ஆறுமுகத்துக்குத் தெரிந்தாள். அவனுக்குப் பிடித்த செவ்வந்திப் பூக்களையும் வெல்லக் கட்டிகளையும் வைத்திருந்தாள். முதலிருமுறை வெறுமனே பார்த்திருந்தனர். மூன்றாம்முறை கலயத்தில் கஞ்சி ஊற்றிக்கொடுத்தாள். பிறகு முத்தமிட்டுக்கொண்டார்கள். செவ்வந்திப் பூக்களைக் கொய்தபோதுதான் அவர்களுக்குள் முதல் கலவி நிகழ்ந்தது. ஓடை தாண்டிய வெள்ளத்தைப் போல் திசையறியாமல் ஓடி அத்துவானக் காட்டிற்குள் நிலைகொண்டது அந்தக் கலவி. ஆனால் அது கோடைக் கால தாகம்போல்தான் இருந்தது. இரு உடல்களும் தணியாத வேட்கையுடன் பிரிந்தன. அவள் அவனது இயலாமைகளை விலக்கினாள். பேரிளம் பெண்ணொருத்தி போல் அச்சாகஸத்தின் நுட்பங்களை அவனுக்குக் காண்பித்தாள். தேரிக் காடு போன்ற அவள் உடலெங்கும் பெரும் சந்தோஷம் கொண்டோடினான் அவன். அவர்கள் பெரும்பாலும் அரவமற்ற ஆறுமுகத்தின் வத்தல் கிடங்கில் சந்தித்துக்கொண்டார்கள். ‘‘என்னக் கட்டிப்பீகளா?’’ என்னும் பதிலை எதிர்பாரா, அர்த்தமில்லாக் கேள்வியை அவள் அவ்வப்போது எழுப்புவாள். அவன் அதற்கான பதிலைச் சொல்வதில்லை. ஆனாலும் அவள் தன் பதின்ம வயதுடலை அவனுக்காகத் திறந்துவைத்தாள். அமிர்தம் தேடும் ஆதிசேஷனாக அலையும் அவன், வள்ளியின் கேந்திப் பூக்களை நினைவில் தீண்டி மூர்க்கம்கொள்வான். அப்போது அவள் தன்னுடலை மேலும் விரித்து அவனைப் பற்றிச் சுவைப்பாள். நினைவில் ஏந்தவியலாமல் வழியும் பரவசம் மிக்க இந்தக் கணங்கள் வள்ளியின் நினைவெழும் அந்தக் கணங்களின் பெரும் பள்ளத்தை நிறைத்துக்கொண்டிருந்தன. லெக்கம்மாளைப் பிரிந்திருந்த நேரங்களிலும் அவ்வுடலின் உவர்ப்புச் சுவையிலே அடைந்துகிடந்தான் ஆறுமுகம்.


இரண்டாம் முறை கருக்கலைந்தபோதுதான் இந்தத் தொடுப்பு கணேசனுக்குத் தெரியவந்தது. அப்போது பால் தேவர் வீட்டுத் திண்ணையில் மாயகிட்ணனுடன் ஆடுபுலி ஆடிக்கொண்டிருந்தான் ஆறுமுகம். மூர்க்கமடைந்த விலங்குபோல் அங்கு வந்த கணேசன் அவன்மேல் பாய்ந்தான். அவன் பேசச் சொல்லெடுக்கும் முன் கணேசனின் ஊனு கம்பு வீச்சு ஆறு முகத்தைத் தாக்கத் தொடங்கியது. மாயகிட்ணன் தடுக்க முயன்று பின் வாங்கினான். பலவீனமான சிறு ஜீவன்போல் செம்மண் சுவரில் ஒண்டிய ஆறுமுகம் சகிக்க முடியாத குரல்கொண்டு இறைஞ்சத் தொடங்கினான். சனம் கூடி கணேசனைப் பிடித்து நிறுத்தியது. சந்நதம் கொண்டதைப் போல் உறுமியபடியே இருந்தான் கணேசன்.

ஆறுமுகத்தின் ரோட்டு வீட்டுத் திண்ணையில்தான் பேச்சுவார்த்தை நடந்தது. சீமைச்சாமியும் கணக்குப் பிள்ளையும் பேசிப் பார்த்தனர். கல்யாணம் கட்டிக்கொள்ள வேண்டுமென்றனர். “இதெதுக்கு பஞ்சாயத்தக் கூட்டி காரியாலயத்துல பேசிருவோம்” என்றது கூட்டத்தில் ஒரு குரல். காரியாலயத்தைக் கூட்டப் பிடிவாதமாக மறுத்துவிட்டாள் ஆறுமுகத்தின் ஆச்சி. ‘‘மேக்கொண்டு பேச்செதுக்கு லெக்கம்மாவுக்கு ஆறு மரக்கா வயக்காடும் அஞ்சாயிர ரொக்கோ தாரே’’ என அவள் கடைசியாகச் சொன்னதைச் சீமைச்சாமி ஏற்றுக்கொண்டு கணேசனிடம் சம்மதம் சொன்னான்.

ஆறுமுகத்தின் ஆச்சி அவனோடு பேச மறுத்திருந்தாள். நோய் கண்ட விலங்குபோல் கொல்லைக்கு அருகிலிருந்த பெத்தனாட்சி அத்தை வீட்டுத் திண்ணையில் கிடந்தான் அவன். லெக்கம்மாளைப் பிரிந்த அவன் பெத்தனாட்சியின் நடு வீட்டில் உறங்கத் தொடங்கினான். கேரளா ஜவுளி வியாபாரத்திலிருந்து திரும்பிய அவள் கணவன் ஆறுமுகத்தை விரட்டி அடிக்கும்வரை அவர்கள் உறவும் அவ்வூரின் பேசுபொருள்களுள் ஒன்றாக இருந்தது.

ஆறுமுகத்துக்குப் பித்துப் பிடித்துக்கொண்டதாகப் பேசிக்கொண்டார்கள். ஏதோ நினைவில் பீடித்திருந்த அவனைத் தார்சாவில் கிடத்தியிருந்தனர். சுந்தர பாண்டிய சாஸ்தாவையும் மாலையம்மாளையும் திட்டித் தீர்த்தாள் அவன் ஆச்சி. செய்வினை இருக்குமென்று அவளின் கூட்டுக்காரிகள் சொல்லிச் சென்றனர். அன்னமில்லாமல் புஞ்சைக்குப் போய் வரப்பில் தவறி அவளும் அறைவீட்டிற்குள் முடங்கினாள். இருபக்கமும் பெரிய திண்ணையோடு எப்போதும் திறந்துகிடக்கும் அந்த ரோட்டு வீட்டைத் தரித்திரம் பிடித்த வீடென அழைக்கத் தொடங்கியது அவ்வூர்.

ஆறுமுகத்தின் ஆச்சி இறந்து விஷேசம் முடிந்திருந்தது. அவள் முடங்கிப்போனதற்குக் காரணம் கணேசன்தான் என அவன்மீது பழி வளர்த்துக் காத்திருந்தான் ஆறுமுகம். அவன் ஆச்சி செப்பனிட்டு மேடேற்றிய அந்த ஆறு மரக்கா பூர்வீக நஞ்சையைக் கணேசனுக்குப் பட்டா முடிக்கவும் மறுத்தான். இரண்டு மூன்றுமுறை காரியாலயம் கூடிக் கலைந்தது. ஒருமுறை ஆறுமுகத்தின் மூக்குடைந்தது. கணேசனைப் போலீஸார் பிடித்துச் சென்றனர்.

இருவரும் பகைத்திருந்த வெகு காலத்திற்குப் பிறகு கணேசன்தான் தன் குழந்தைக்கு முடியிறக்க அழைக்க வந்திருந்தான். விநாயகமும் ஆறுமுகமும் வண்டிகட்டிப் போயிருந்தனர். ஆச்சி படுக்கையில் கிடந்தபோதே தங்காரத்திலிருந்த அவளுடைய சொந்தப் பெண்ணான விநாயகத்தை ஆறுமுகத்துக்குக் கட்டிவைத்திருந்தாள். வள்ளியின் சாயலில் இருந்த அவளைப் பார்த்ததுமே பிடித்திருந்தது ஆறுமுகத்துக்கு. ரோட்டு வீட்டுத் திண்ணையில் திரும்பவும் கணேசனைக் கண்டவர்கள் புருவ உயர்த்தல் போன்ற சிறிய குரலெழுப்பிச் சென்றனர். ராசியான கூட்டுக்காரர்கள் ஒன்றாக வியாபாரத்துக்குச் சென்றனர். ஒருநாள் கணேசனுக்காக முதுகுளத்தூர் சந்தைக்கு. இன்னொரு நாள் ஆறுமுகத்தின் கமிசன் வியாபாரத்துக்காகக் கோவில்பட்டிக்கு. சிற்றூர் பலவற்றிற்குக் கணேசன் ராசியான வியாபாரியாக வளர்ந்தான். ஆறுமுகத்துக்கு வத்தல் வியாபாரம் கைகொடுத்தது. மூக்கையாவிடமிருந்து நஞ்சை நிலங்களைத் திருப்பினான். நெல்லறுத்தவுடனே உளுந்துடைத்துக் கையுளைந்தாள் விநாயகம். வருசம் ரெண்டு வெள்ளாமை எடுத்தார்கள்.

ஒரு தைமாசக் கடும் பனி ஆறு முகத்தைத் தாக்கியது. இரவெல்லாம் இளைத்துப் பகலெல்லாம் பிணம் போல் உறங்கினான். அந்த வருசம் இருப்பிலிருந்த ஐம்பது குண்டல் வத்தல் விலையில்லாமல் நொதித்துப் போயிருந்தது. எடுத்த இடத்தில் பதில் சொல்லி முடியவில்லை. ரெண்டு குருக்கம் புஞ்சையை விற்றிருந்தான் அவன். இளப்பு நோயும் முற்றி ஆளை முடக்கியிருந்தது. அப்போதுதான் கணேசன் வீட்டிற்குள் நுழைந்தான். ஆறுமுகத்தைத் திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்று இளப்புக்கு மருந்து வாங்கிவந்தான். நாட்டுக் கம்பெடுத்த இடத்திலிருந்தும் ஆட்கள் வந்துசென்றுகொண்டிருந்தனர். அவர்கள் அனைவரோடும் கணேசன்தான் சமரசம் பேசினான். அரைக் குருக்கம் புஞ்சையை விற்றடைத்தான். மாட்டு வியாபாரத்திலிருந்து திரும்பும் அகாலவேளைகளிலும் ஆறுமுகம் படுத்திருக்கும் திண்ணையை எட்டிப்பார்த்துச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். பொல்லா நோயொன்றில் தாக்குண்டதைப் போல் ஆறுமுகம் மேலும் ஒடுங்கிப்போனான். ‘‘ஆள் வண்டிய விட்றும்போல’’ எனப் பார்த்துச் சென்றவர்கள் பேசிக்கொண்டார்கள். ஒரு செல்லப் பிராணிபோல் அவ்வீட்டைச் சுற்றிவந்த விநாயகம் இப்போது நிறம் மாறி அவர்கள் இருவரும் நின்றிருந்த இடத்திலிருந்து விலகிச் சென்றிருந்தாள். அவன் காணக்கூடியதாகவிருந்த இடைப்பட்ட அந்த வெளிக்குள் கணேசன் நுழைந்திருந்தான்.

பால்யத்தில் அவன் பிரக்ஞையுணர்ந்த முதல் காட்சியிலிருந்து ஒவ்வொன்றும் கனவைப்போல் விரிந்துகொண்டிருந்தன. விருவுகள் பாளம் பாளமாக வெடித்துக்கிடக்கும் கரிசல் நிலத்தில் ஒற்றையாளாக ஏர் பிடித்துக்கொண்டிருக்கிறார் அவன் அப்பா. தெளிவில்லா அவ்வுருவம் அவனையும் ஏர் பிடிக்க அழைக்கிறது. கலப்பையைப் பிடித்துக்கொண்டிருக்கும்போதே சுவாசிக்க இயலாமல் அவ்வுருவம் கரிசலில் சரிந்து விழுகிறது. அவன் அம்மா அவனுக்குப் பிடித்த வெந்தயக்களியைக் கிண்டிவைத்துச் சாப்பிட அழைக்கிறாள். கூட்டுக்காரர்களுடான பேச்சுச் சுவாரஸ்யத்தில் அதை மறுக்கிறான். அவர்கள் கலைந்து திரும்புவதற்குள் அவள் நாண்டுகிடக்கிறாள். இன்னொன்றில் அவன் ஆச்சி உளுந்து விதைத்துக்கொண்டு, பொட்டலாகக் கிடந்த அப்பூர்வீக நிலத்தைத் தான் வாழ்க்கைப்பட்டு வந்த பிறகு செப்பனிட்டதைச் சொல்லி உரமேற்றுகிறாள்.

ஆறுமுகம் வந்திறங்கிய ஊரில் பூஜைக்குண்டானவற்றை வாங்கிக்கொண்டான். ஊருக்கு வெளியிலிருந்த கோயில் முன்பு வாகனம் ஒன்று நின்றுகொண்டிருந்ததைக் கண்டதும் நாவிதனையும் பூசாரியையும் அழைத்துவர வேண்டியதில்லை என நினைத்துக்கொண்டான். பங்குனி உத்தரத்தன்று எங்கும் கடைகளும் கொட்டகைகளும் முளைத்து நிற்கும் அவ்விடம் இப்போது பொட்டல் வெளியாய் விரிந்துகிடக்கிறது. அந்தக் கோயிலுக்கு முதன்முதலாக அவன் அம்மா அப்பாவோடு வந்திருந்தான். ஆச்சியோடு பலமுறை வந்திருக்கிறான். ஒருமுறை வள்ளி குடும்பத்தோடு வந்தது சற்றும் அழியாத சித்திரமாக அவனிடத்தில் இருக்கிறது. நேர்த்திக்கடன் செலுத்தி பூஜை முடித்தான். வேனில் வந்திருந்தவர்கள் தந்த பொங்கச் சோறைத் தின்று பசியாறினான். சிற்றூர்களின் தலைநகர்போலிருக்கும் அந்நகருக்கு அவன் வந்து சேரும்போது அவ்வூர் முழுவதும் இருள் இறங்கியிருந்தது. மிளகாய்ச் செடிகளுக்கான மருந்து வாங்கித் திரும்புவதற்குள் ஊருக்குச் செல்லும் கடைசிப் பேருந்தைத் தவறவிட்டான்.

பேருந்து நிலையத்திலே இரவு முழுவதும் காத்திருந்து அதிகாலை முதல் பேருந்தில் ஏறிச் சம்மாரம் விலக்கிலே இறங்கிக்கொண்டான். கோவில்பட்டி டவுனில் எடுத்து வைத்திருந்த காவிநிறப் புதுச் சட்டையை, உடுத்தியிருந்த சட் டைக்கு மேலே அணிந்துகொண்டு அவன் ஆச்சி மேடேற்றிச் செப்பனிட்ட அப்பூர்வீக நிலத்தை நோக்கிப் பிறழ்வுடைய சாலைவாசிபோல் நடக்கத் தொடங்கினான் ஆறுமுகம்.

ஓவியங்கள் : செ. சீனிவாசன்

(காலச்சுவடு 2012 ஜனவரி இதழில் வெளிவந்த கதை)