Monday, August 24, 2015

சேரனின் நிலம், போர், காதல்


இலங்கைத் தமிழ்க் கவிதைகள், இந்தியத் தமிழ்க் கவிதைகளில் இருந்து வேறுபட்டவை; காத்திரம் மிகுந்தவை. புதுக்கவிதை பிறப்பதற்கு முன்பான இந்தியத் தமிழ்க் கவிதைகளுடன் இலங்கைத் தமிழ்க் கவிதைகளுக்கு உறவு உண்டு. அந்தக் காலகட்டத்திய மரபின் தாக்கத்தை இலங்கைத் தமிழ்க் கவிதைகளும் பிரதிபலித்தன. ஆனால் புதுக்கவிதை பிறந்ததற்குப் பிறகான இந்தியத் தமிழ்க் கவிதைகளின் நிலை வேறு. அவற்றில் மரபின் பாதிப்பு உள்ளடக்கம் ரீதியாகவும் மெல்லக் குறைந்து இன்று கிட்டதட்ட இல்லாமல் ஆகியிருக்கிறது. மாறாக இலங்கைத் தமிழ்க் கவிஞர்கள் மரபை உள்வாங்கி தங்கள் நிலப் பதிவுகளை இந்தப் புதிய வடிவத்திற்குள் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களுள் ஒருவர்தான் கவிஞர் சேரன்.
...
மஹாகவி உருத்திரமூர்த்தி இலங்கைத் தமிழ்க் கவிதையின் முன்னோடிக் கவிஞர். ‘பாரதியின் ஒரு கிளை பிச்சமூர்த்தி என்றால் அதன் மறுகிளை மஹாகவி உருத்திரமூர்த்திஎன்கிறார் இலங்கைக் கவிஞர் சண்முகம் சிவலிங்கம். சண்முகம் சிவலிங்கமும் எம்..நுஃமானும் மஹாகவிக்கு அடுத்த தலைமுறைக் கவி ஆளுமைகள். இந்த மூவரும்தான் சேரனின் ஆதர்ச கவிகள். மரபில் கவிதைகள் எழுதியவர் மஹாகவி. சண்முகம் சிவலிங்கம், எம்..நுஃமான் இருவரின் கவிதைகளையும் அதன் அடுத்தடுத்த நிலைகளாகக் கொண்டால் சேரன் கவிதைகளுக்கு இதில் மூன்றாம் நிலை. தரவரிசை அல்ல இது; கவிதை அடைந்த வடிவ மாற்றம்.
...

சேரன் 1978-ல்தான் தீவிரமாகக் கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவரது கவிதைகள் 1983-ல் தொகுக்கப்பட்டுவயல்காலாண்டிதழில் வெளிவந்தன. சேரன் தீவிரத்துடன் இயங்கிய இந்த 1978-1983 காலகட்டத்தில்தான் இலங்கையில் இனப் பிரச்சினை வன்முறையாக வெளிப்படத் தொடங்கியது. இனக் கலவரம் 1981-ல் நடந்தது; யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. அவரது முதல் கவிதைத் தொகுப்பின் தலைப்புஇரண்டாவது சூரிய உதயம். இந்தக் கவிதை யாழ்ப்பாண நூலக எரிப்புச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 1981-க்குப் பிறகும் வன்முறைகள் தொடர்ந்தன; திருநெல்வேலித் தாக்குதல், கறுப்பு ஜூலைப் படுகொலைகள் எல்லாம் நடந்தன. சேரன் கவிதைகளுக்கு இந்தப் பின்னணி மையமாக ஆகியது.
....

உச்சரிக்க ஏதுவான, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கவிதைகள் சேரனுடையவை. அதே காலகட்டத்தில் தமிழகக் கவிதைகளில் நடந்த தொழில்நுட்ப ரீதியிலான சோதனை முயற்சிகளுடன் சேரனின் கவிதைகளை ஒப்பிட முடியாது. கவிதைகளை, படைப்பு வீச்சுக்குள் மட்டும் கட்டிப்போட சேரன் நினைக்கவில்லை. ஓசைகளையும், உணர்ச்சிகளையும் ஓங்கி ஒலிக்கச்செய்ய விரும்பினார். அல்லது இந்தப் பண்பு சேரன் கவிதைகளுக்கு உண்டு எனலாம். அதே சமயம் தமிழகத்தில் எழுந்த முற்போக்குக் கவிதைகளைப் போல சேரன் கவிதைகள் வெளிப்படையானவை அல்ல. கோஷங்களாகவோ, கூப்பாடுகளாகவோ அல்லாமல் ஒடுக்கப்படுவதையும் உரிமையையும் வலுவான மொழியில் சேரன் கவிதைகள் உரைக்கின்றன.
...


சேரன் கவிதைகளின் மொழிக்கு மரபின் தாக்கம் உண்டு. ‘குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி, இட்டும் தொட்டும்என்ற புறநானூற்றுப் பாடலின் வெளிப்படும் இதே ஓசை நயத்தைச் சேரனின் சில கவிதைகள் அப்படியே தாங்கி வருகின்றன. சில கவிதைகள், நாட்டார் பாடல்களை ஒத்த ஒசை நயத்தைக் கொண்டுள்ளன. ஆனால் எல்லாக் கவிதைகளிலும் ஆங்கில நவீனக் கவிதைகளின் இறுக்கத்தையும் மெளனத்தையும் சேரன் உட்கிரகித்துள்ளார். இந்த மெளனமும் இறுக்கமும் முற்போக்குக் கவிதைகளில் இருந்து சேரனை வேறுபடுத்திக்காட்டுகிறது.
...

சேரன் கவிதைகள் வெளிப்படும் நிலம், இலங்கையின் வடகிழக்குப் பகுதி. அங்குள்ள பறவைகள், தென்னை மரங்கள், பனைகள், வயல் வெளிகள் எல்லாமும் சேரனின் கவிதைகளில் சித்திரங்களாக உயிர்பெறுகின்றன. ஓவியராகவும் இருக்கும் சேரனால் அவற்றைத் தன் கவிதைகளுக்குள் வரைந்து காட்டவும் முடிகிறது. அந்த நிலத்தின் மீதான சேரனின் பிடிப்பு, இனவாதப் பிரச்சினைக்குப் பிறகு மூர்க்கத்துடன் எழுகிறது.

நூறுநூறாயிரம் தோள்களின் மீது/ ஏறி நின்று,/எனது நிலம் என உரத்துச் சொல்கிறேன்./ஏழு சமுத்திர வெளிகளைத் தாண்டி/அதன் மேல் எழுகிற அலைகளை மீறி/அதனைக் கொண்டு போய்,/எங்கும் ஒலிக்கிறது காற்று/எனது நிலம்/எனது நிலம்என உரத்துச் சொல்கிறார் சேரன்.

பின் அவரது அந்த நிலத்தின் காட்சிகள் மாறத் தொடங்குகின்றன. ‘அரசமரக் கிளைகளிலே குயில் கூவும்சப்தம் மட்டும் அழகான வேளைகளின் மீது ஜீப் வண்டி உறுமுகின்றன; சப்பாத்தொலிகள் தடதடக்கின்றன. மரங்களும் இலைகளும் நிறங்களை இழக்கின்றன. நிலத்திலும் காற்றிலும் அந்நியத்தன்மை கலக்கிறது. அந்த நகரத்து மக்கள் முகங்களை இழக்கின்றனர். சேரன் இந்த நிலக் காட்சிகள் வழியாகத் தமிழ் இனத்தின் மீது தொடக்க காலத்தில் நிகழ்ந்த கலாச்சாரப் படுகொலைகளை மறைமுகமாகச் சித்திரிக்கிறார். பிற்காலக் கவிதைகளில் பனி பொழியும் கனடா நிலக் காட்சிகள் வருகின்றன.
...

சேரன் கவிதைகளில் கூக்குரல் இருக்கிறது; புரட்சிக்கு அழைக்கும் குரல். ‘சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வருகஎன்கிறார். கணவனை இழந்த பெண்ணிடம், “ ‘அப்பாஎன அலறித் துடிக்கிற/ மழலைக்கு என்னதான் சொல்வாய்?/... கொடுமைகள் அழியப் போரிடச் சொல்என்கிறார். ஆனால் இவை கவிதைக்காக உருவாக்கப்பட்ட வெற்றுச் சொற்கள் அல்ல; சடங்கான அழைப்பு அல்ல. திட்டமிட்ட, குறிக்கோள் உள்ள அழைப்பு. ஏனெனில் இனப் பிரச்சினையை ஒற்றத்தன்மையில் பார்க்கவில்லை அவர். சிங்கள ராணுவ வீரனின் பக்கம் நின்றும் அவரால் பார்க்க முடிகிறது. தன் மனைவிக்கு ஒரு சிங்கள ராணுவ வீரன் எழுதும் கடிதமாக இந்தக் கவிதை விரிகிறது,

இன்று எதிரிவீரவும் சந்திரசிறியும்/மூன்று தமிழரைச் சுட்டுக் கொன்றனர்./‘நெருக்கடி மிகுந்த தெருவில்/திடீரென இவர்கள் ஓடிச் சென்றதால்,/கலவரமுற்றுச் சுட்டுவிட்டேன்/என்று சந்திர சொன்னான்; பிறகு./விசாரணையின்றியே/இரண்டுபேரையும்/கொழும்புக்கு அனுப்பினர்/இடமாற்றம்தான்./(கொடுத்து வைத்தவர்கள்)/...அப்புறம், உடனடியாக மாற்றம் கேட்ட/எமதுபிரிவு நேற்றுத் தெருவில்/இறங்கிற்று.../எத்தனைபேரைச் சுட்டுத் தீர்த்தது/என்ற விபரம் சரியாகத் தெரியாது./ஐம்பது அல்லது அறுபது என்று/மேஜர் நினைக்கிறார்.”

அன்பான நகர்ப்புறத்துக் கொரில்லாவே !/என் வந்தனங்கள் உனக்குஎனத் தொடங்கும் கவிதையிலும் சிங்கள மக்கள் மீது போராளி இயக்கங்களால் நிகழ்த்தப்படும் வன்முறையைத் தவறெனச் சுட்டிக்காட்டுகிறார். அதுபோல போராளி இயக்கங்களின்இரவல் புரட்சியைவிமர்சிக்கவும் சேரன் தயங்கவில்லை.
...

சேரனின் பிற்காலக் கவிதைகளில் காமம் முக்கியமான பாடுபொருளாக வெளிப்படுகிறது. இது அவரது புலம்பெயர்வுக்குப் பிறகானது என யூகிக்க முடிகிறது. காமம் என்றால் ஆழ்ந்து, ஊறித் திளைத்த காமம். அது வாதையுடன் வெளிப்படுகிறது.

குருதியும் தசையும் ஈரமும்/விலகிப் போன அந்தக் கணங்களில்/இருவருடைய எலும்புகளும் பெரும் விவாதத்தில் ஈடுபட்டு/நொருங்கினஎன்கிறது ஒரு கவிதை.

சில கவிதைகளில் காமம் ஓர் உன்னதத்தை அடைகிறது. “சுழலும் உலகம் தன் அச்சில் மாறிச்/சுழல்க சுழல்க/ஒளிரும் கண்ணும் உடலும் இன்னும்/மலர்க மலர்கஎன்கிறது மற்றொரு கவிதை. திறக்கப்படாத மதகிலிருந்து வெள்ளம் பிரவாகம் எடுப்பதுபோல, சேரன் கவிதைகளிலிருந்து காமம் பாய்ந்து வருகிறது.
...


சேரன் தொடக்ககாலக் கவிதைகள் 1972-ம் ஆண்டு வெளிவந்ததாகச் சொல்லப்படுகிறது. கிட்டதட்ட நாற்பதாண்டுகளை அவர் கவிதை உலகம் கடந்து வந்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் இலங்கை இனப் பிரச்சினை ஆயுதப் போராட்டமாகத் தொடங்கி, ஆயுதக் குழுக்கள் பலம் அடைந்தது. இன்று இன விடுதலைப் போரும் தோல்வியில் முடிந்திருக்கிறது. ‘எனது நிலம்எனும் சேரனின் ஒரத்த குரல் அவருடைய சமீபத்தியகாடாற்றுதொகுப்பில் இல்லை. போரின் இரத்த சாட்சியங்களாக இந்தத் தொகுப்பு விரிகிறது. திணை மாறி வாழும் தன் வாழ்க்கையைத் திணை மயக்கக் கவிதைகள் வழியாகச் சொல்கிறார். இந்தக் கவிதைகளில் மஹாகவியின் பாதிப்பை உணர முடிகிறது.


ஒட்டுமொத்தமாக சேரன் கவிதைகளை வாசிக்கும்போது அவற்றில்எதிர்ப்பையும், எதிர்பார்ப்பையும், தவிப்பையும், கொதிப்பையும், ஆற்றாமையையும், முடிவற்ற ஒரு பெருங்கனவையும்உணர முடிகிறது. இது கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட இலங்கை இன விடுதலைப் போராட்டத்திற்கும் பொருந்தக்கூடியது.

....
சேரன், 1960-ம் ஆண்டு இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே அளவெட்டியில் பிறந்தவர். இவரது கவிதைகள் ஆங்கிலம், ஜெர்மன், மலையாளம், கன்னடம், சிங்களம், ஸ்விடீஷ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதுவரை ஏழு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன; நாடகங்களும் எழுதியுள்ளார். 2001 வரை எழுதப்பட்ட கவிதைகள், ‘நீ இப்பொழுது இறங்கும் ஆறு’ என்ற தலைப்பில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. தற்போது கனடாவில் விண்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவில் மற்றும் மானுடவியல் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
...

சேரனின் கவிதைகள்:

இரு காலைகளும் ஒரு பின்னிரவும்

இன்றைக்கு, இப்படித்தான்
விடியல்:
இருள் முழுதும் பிரியாது,
ஒளி நிறைந்து விரியாத
ஒரு நேரம்
விழித் தெழுந்து வெளியில் வரக்
கிணற்றடியின் அரசமரக் கிளைகளிலே
குயில் கூவும்;
'ஓ'வென்று நிலத்தின் கீழ்
ஆழத்துள் விரிந்திருந்த
கிணறு,
சலமற்று உறங்கியது
என்மனம் போல.

இன்றைக்கு இப்படித்தான்
விடியல்!

நாளைக்கும்,
இப்படித்தான் விடியும்
என்று நினையாதே
பாதி ராத்திரியும் மெதுவாகப்
போனபின்பு, 'கேற்'றடியில்
அடிக்குரலில் ஜீப் வண்டி உறுமும்,
சப்பாத் தொலிகள் தடதடக்கும்.
அதிர்ந்ததென
எம் வீட்டுக் கதவுகளோ
விரிந்து திறந்து கொள்ள,
அப்போதுதான்,
அடுத்தநாள் பரீட்சைக்கு
விரிவுரைக் குறிப்புகள்
விழுங்கிக் களைத்ததில்
விழிகள் மூடிய
அந்த இரவிலே -

'அவர்கள்' கூப்பிடுவது
கேட்கும். காதில்
ஊளையிடும் காற்று.
'எங்கே அவன்' என்று
கேட்பார்கள். கேட்கையிலே
பிழைபட்ட தமிழ், நெஞ்சில்
நெருட எழுந்து வரும்.

வார்த்தையற்று,
அதிர்ந்து போய்,
'இல்லை' எனத் தலையாட்ட
இழுத் தெறிவார்கள் ஜீப்பினுள்
நிறுத்தாத எஞ்சின்
அப்போதும் இரைந்தபடி.

பிறகு - ?
பிறகென்ன, எல்லாம்
வழமைப்படி.

காலை; வெறும் சூரியன்.
வெய்யில்! நிலத்தில்
எனக்கு மேல்
புல்!

சிலவேளை - வீடுவந்து
கதவு திறப்பதற்காய்க்
குரல் காட்டித் திறக்கமுன்பு
இருமிச் சளி உமிழ
முகந் திருப்ப
உள் ளிருந்தும்,
அம்மா இருமும் ஒலி கேட்கும்!

கதவு திறப்பதற்காய்க்
காத்திருந்தேன்
வெளியுலகம்
இப்போதும் முன்போல
அடங்கி இருக்கிறது.
...

இரண்டாவது சூரிய உதயம்

அன்றைக்கு காற்றே இல்லை;
அலைகளும் எழாது செத்துப் போயிற்று
கடல்.

மணலில் கால் புதைதல் என
நடந்து வருகையில்
மறுபடியும் ஒரு சூரிய உதயம்.

இம்முறை தெற்கிலே -

என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது;
எனது மக்கள் முகங்களை இழந்தனர்,
எனது நிலம், எனது காற்று
எல்லாவற்றிலும்
அந்நியப் பதிவு.

கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்களின் மீது
நெருப்பு,
தன் சேதியை எழுதியாயிற்று!
இனியும் யார் காத்துள்ளனர்?

சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து
எழுந்து வருக.
...

காதல் வரி

இலைகள் உதிர்த்து உதிர்த்து
மாரி நெடுந்துயிலிற்குத் தயாராகும்
குளிர்கால மரங்களின் மேல்
மூச்செறிகிறது
இன்னும் தலை நிமிராத நிலவு.

ஹேக் நகரின்
இச் ‘சமாந்தர வீதி’யில்
273ஆம் இலக்க வீட்டின்
முன்னறை
சிறிது புதிது
சுவரில் வான் கோவின் பூமரம்.

இரவு விளக்கின் மெல்லிய ஒளி
கசிந்து
கதிரையின் முதுகின்மீது
விசிறப்பட்டுக் கிடக்கும்
மார்புக் கச்சையின்மீது படர்கிறது.

காது மடல்களின் பின்புறம்
இதழ்கள் தொட
மனம் இழைந்து
உடல் அவிழ்ந்து
பொறி கிளம்பித்
தீ பிறந்தது.
காட்டுத் தீயெனப் பற்றி எரிந்தோம்.
தணல் பறந்து
தகித்த வெப்பத்தில்
வெளியே உறைபனியும் உருகிற்று.

மொழியைக்
கண்களும் உடலும் எடுத்துக்கொண்ட
பிற்பாடு
சொற்கள் உறைந்தன.
பின்
உருகி அனுங்கலாயின
இடையிட்ட மௌனத்தின் அர்த்தப்
பிரவாகமோ
முடிவிலி வரை.

நீராய்ப் பெருகி
நதியாய் நகர்ந்து
கடலாய்ப் பரந்து செறிந்தோம்.

செயலிழந்து, உடைந்துபோன
காலைக் கடிகாரத்தின் நுண்ணிய
பகுதிகள்,
இலையுதிர் காலத்தில்
உதிர்ந்து சிதறிய சருகுகள்
இவற்றோடு வீசியெறியப்பட்டுக் கிடந்தன
புலன்கள்.

காமனின் கண்ணி வெடி
உயிர் பிளந்து உதிக்கிறது
காதல்
புதிதாக

ஒருபோது நான் நானில்லை
பெண்ணானேன்.
நீ என்னுள் நுழையப்
புலன் மயங்கிற்று
புவியீர்ப்பை எதிர்த்து
ஒரு முடிவற்ற நீர்வீழ்ச்சிதான்
நானென உணர்ந்தேன்
மறுபோது ஆணானேன்
இரவின் சங்கீதம்
நடம் புரிகிற
இரு உடல்
வெளி
எரிகிற நிலவு
இன்னும் உதிரும் சருகு.

பெருங்காற்றில் உழன்ற
மூங்கில் காடு போலக்
குழம்பிற்று கூந்தல்
விரகம் எரித்த இரவு

விடியலாய் வெளிற
காதல் தீ தணிந்து
உடல் அவிய
கண்ணிருண்டு துவண்டேன்
எனினும்
துயில் இன்றல்ல
நாளை

அதுவரை
சுழலும் உலகம் தன் அச்சில் மாறிச்
சுழல்க சுழல்க
ஒளிரும் கண்ணும் உடலும் இன்னும்
மலர்க மலர்க.

Wednesday, August 12, 2015

ஆர். நல்லகண்ணுவின் அறியப்படாத இலக்கிய முகம்இதே டிசம்பர் மாதத்தில்தான் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய விவசாயிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 1968-ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் பாதிப்பை விளைவித்தது. ஞானக்கூத்தன், இன்குலாப், இந்திரா பார்த்தசாரதி, சோலை சுந்தரபெருமாள் உள்ளிட்ட பலரும் பல்வேறு காலகட்டங்களில் இந்தச் சமூகக் கொடுமையைத் தங்கள் படைப்புகளில் பதிவுசெய்துள்ளனர்.

ஆனால் அதற்கு ஆறாண்டுகளுக்கு முன்பு 1962-ல் இதே போன்ற ஓர் அடக்குமுறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் நடத்திவந்த ‘சாந்தி’ இதழில் ‘சூத்திரதாரி’ என்னும் ஒரு சிறுகதை வெளிவந்திருந்தது. ஆர். என். கண்ணன் என்பவர் அந்தக் கதையை எழுதியிருந்தார். அந்தக் கதைக்கு நல்ல வரவேற்பு. வெளிவந்தவுடனே பரவலாக வாசிக்கப்பட்டு கவனமும் பெற்றது. அந்த எழுத்தாளருக்கு அதுதான் முதல் கதை. அதற்கு முன்பு கட்டுரைகள் எழுதியுள்ளார். முதல் கதைதான் என்றாலும் கதையின் விவரிப்பு கூர்மையானதாக இருந்தது. உண்மை ஒளியும் பொருந்தியிருந்தது. வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்தும் தொ.மு.சியின் ‘பஞ்சும் பசியும்’, பூமணியின் ‘வெக்கை’ போன்ற நாவலை எழுதியிருக்க வேண்டிய அந்த எழுத்தாளர் துரதிர்ஷ்டவசமாக அதன் பிறகு கதையே எழுதவில்லை. அதுவே அவரது முதலும் கடைசியுமான கதையாகிவிட்டது. ஆனால் அவர் தன் வாழ்க்கையைப் பக்கங்களுக்குள் அடக்கவியலாத அனுபவங்களால் ஆனதாக மாற்றிக்கொண்டார். 72 ஆண்டுகளுக்கும் மேலான அவரது பொது வாழ்க்கையே இன்றைய சமூகத்திற்கான ஒரு முன்னுதாரணம். தோழர் ஆர்.என்.கே. என அழைக்கப்படும் மதிப்புமிக்க தலைவர் நல்லகண்ணுதான் அந்த எழுத்தாளர்.


சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் இயக்கம்தான் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்தது. அந்த இயக்கமோ பெரும்பாலும் பண்ணையார்களையே நம்பியிருந்தது. சுதந்திர இந்தியாவிற்குத் தேர்தல் வந்தபோது வேட்பாளர்கள் பலரும் பண்ணையார்களே. இல்லையெனில் பண்ணையார்களின் ஆதரவையும் ஆசியையும் பெற்றவர்களாக இருந்தனர். சுதந்திரம் பெற்ற பிறகும் அதே ஆண்டான், அடிமை முறைதான். இந்தச் சூழலில்தான் ‘ஆகாவென்று எழுந்தது யுகப் புரட்சி’. தோழர்கள் பலர் கிராமம் கிராமமாகச் சென்று முதலாளிகளின் அடக்குமுறை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினர். தோழர் நல்லகண்ணு அவர்களுள் ஒருவர்.


அந்தக் காலகட்டத்திய நல்லகண்ணுவின் அனுபவம்தான் ‘சூத்திரதாரி’ கதையாக வெளிப்பட்டிருக்கிறது எனலாம். நல்லகண்ணு கவிதையின் மீது ஈடுபாடு கொண்டவர். சுப்ரமண்ய பாரதியும், சுத்தானந்த பாரதியும் இவரது ஆதர்ச கவிகள். கவிதைகளும் எழுதியிருக்கிறார்; மொழிபெயர்த்துள்ளார். ஆனால் கதைக்கு மிக எளிமையான வட்டார வழக்கு மொழியே அவர் தெரிவு. அந்தக் காலகட்டத்திய ரொமண்டிஸிசமும் இவரது கதையில் இல்லை. கதைச் சூழல் குறித்த தேவையில்லாத அழகியல் விவரிப்புகள் இல்லை. இந்த அம்சம், கருத்தைச் சிதைக் காமல் கதைக்குப் பலமாகிறது.

சுதந்திர இந்தியாவின் சிறு கிராமத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சாரம்தான் கதையின் மையம். பண்ணையார்கள் அந்தக் காலத்தில் தனி அரசாங்கங்களாக இருந்தனர் என்பதைக் கதை தொடக்கத்திலேயே சித்திரித்துவிடுகிறது. அவர்களின் தீர்ப்புக்கு அப்பீலே கிடையாது என்கிறது கதையின் ஒரு வரி. பண்ணையார்களின் தயவில்தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பதற்கு இந்தக் கதை ஆதாரமாகிறது. பண்ணையார்கள் கை நீட்டிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் நிலையில் மக்கள் இருந்துள்ளனர் என்பதும் புலனாகிறது. ஏனெனில் தனக்குப் பணியாத மக்களைக் காவல்துறையை ஏவித் தண்டிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு இருந்துள்ளது.


கைலாசபுரம் என்னும் கிராமத்தை கீழச்சேர்ப் பண்ணை, மேலச்சேர்ப் பண்ணை ஆகிய இரு பண்ணையார்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர் குமாரசாமியா பிள்ளை பண்ணையார்களின் ஆதரவை நாடி வருகிறார். போட்டியிடுபவர் சொந்தக்காரர். கட்சியும் வேண்டப்பட்ட கட்சி என்பதால் ஆதரிக்கிறார்கள். அந்த ஊரின் பெரும்பான்மை ஜாதி வாக்கை நம்பி அவர்களில் ஒருவரை வேட்பாளராக அறிவித்து தன் கட்சிக்கான அறுவடையைச் செய்ய மற்றொரு புதிய கட்சி முயல்கிறது. இதற்கிடையில் தொழிலாள வர்க்கத்தின் புதிய எழுச்சியுடன் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் களத்தில் இறங்குகிறது.பண்ணைகளைக் கடந்து செல்லும் கம்யூனிஸ்ட் தோழர்களின் சைக்கிள் பேரணி பண்ணையார்களை நடுநடுங்கச் செய்கிறது. ஒலிப்பெருக்கியிலிருந்து தெறிக்கும் அவர்களது முழக்கங்கள் பண்ணையார்களின் செவிநரம்பை அதிரச்செய்கின்றன. பேரணியின் முன்னின்று செல்லும் முனியன் என்ற ஒரு தலித்தை நோக்கிப் பண்ணையார்களின் தடித்த கன்னங்கள் சிவக்கின்றன. அதுவரை ‘பெளவியமாக’ இருந்த தலித்துகளுக்கு கம்யூனிச இயக்கம் தந்த தைரியம் பண்ணையார்களால் சகிக்க முடியாததாக இருக்கிறது. இறுதியில் முனியனின் வீடு தீப்பற்றி எரிகிறது.


நல்லகண்ணு சிறையில் இருந்த கால கட்டத்தில் வாசிப்பு, எழுத்து எனத் தீவிரமாக இயங்கியுள்ளார். நாட்டார் பாடல்கள் மீது அவருக்கு உள்ள நாட்டத்தை அந்தக் காலகட்டத்திய அவரது கட்டுரைகளின் வழியே அறிய முடிகிறது. கசப்புக் கவிஞர் என அழைக்கப்பட்ட ஆண்டான் கவிராயன் குறித்து எழுதியுள்ளார். இந்தக் கவிஞர் குறித்த பதிவை உ.வே.சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ நூலில் பார்க்க முடிகிறது. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் புனைப்பெயர்களில் ஒன்று ‘ஆண்டான் கவிராயன்’. சமுதாய அநீதிகளைச் சபித்துப் பாட இந்தப் புனைப்பெயரை கவிமணி சூட்டிக்கொண்டுள்ளார். ஆண்டான் கவிராயனின் தனிப் பாடல் திரட்டுகளிலிருந்து பல பாடல்களை நல்லகண்ணு மேற்கோள் காட்டுகிறார். 1950-ல்தான் ஆண்டான் கவிராயன் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவருகின்றன. அதை வாசித்துப் பதிவுசெய்ததில் நல்லகண்ணுவின் நுட்பமான வாசிப்பு நமக்குப் புலனாகிறது. சாதி, மத பேதமின்றி உயரும் ஆண்டான் கவிராயனின் சாடல்களைப் பாரபட்சமின்றிப் பகிர்ந்து கொள்கிறார் நல்லகண்ணு.

கொண்டாட்டத்திற்கான, தேம்பலுக்கான வடிவமாகப் பாடல்கள் இருக்கின்றன. சிறைகளின் தனிமையை, கொடுமைகளை கைதிகள் பாடல்கள் மூலம்தான் கடந்திருக்கிறார்கள். அவற்றைச் சிறைப் பாடல்கள் எனத் தனியாகப் பட்டியலிடுகிறார் நல்லகண்ணு. அந்தக் காலத்தில் சிறை அதிகாரிகளை ‘சார்’ என விளிப்பது மரியாதைக் குறைவாகப் பார்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அதிகாரிகளை விளிப்பதுபோல் ‘துரை’ என்றே விளிக்க வேண்டும். இதை மீறும் கைதிகளுக்குக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட்டுள்ளன. “...தீஞ்ச ரொட்டிக்கும்/கையேந்தி நிற்கும் பரிதாபம்/பார்/ சார்... சார்... என்று சொன்னால் ஷட் அப்” என்னும் சிறைப்பாடலை வேடிக்கையாக மேற்கோள் காட்டுகிறார்.

நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் நா. வானமாமலை தொடர்பால் இவருக்கு நாட்டார் பாடல்கள் மீதான ஆர்வம் மிகுந்திருக்கலாம் என அவதானிக்க முடிகிறது. நா.வா. குறித்தும் நல்லகண்ணு எழுதியிருக்கிறார். திரு.வி.க., தமிழ்ஒளி, தொ.மு.சி. ஆகியோர் குறித்தும் மரியாதையுடன் பதிவுசெய்துள்ளார். பாரதி குறித்த அவரது கட்டுரைகள் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன.

காசியில் பாரதி வசித்த வீட்டைத் தேடி அலைந்த கதையைச் சுவாரஸ்யமாகப் பதிவுசெய்கிறார் நல்லகண்ணு. கங்கையின் ஓரத்திலிருந்த ஒரு வீட்டில் பாரதி வசித்துவந்துள்ளார். தன் மாமா மீதுள்ள பயம் கலந்த மரியாதையால் மாடி அறையில் பதுங்கிக்கொண்டிருந்த காட்சியைத் தன் எழுத்துகள் வழியாக நல்லகண்ணு நம் கண் முன்னே உருவாக்கிவிடுகிறார். பாரதிக்கும் அவரது தங்கைக்குமான நேசத்தை நல்லகண்ணு விவரிக்கும்போது பாரதியின் இன்னொரு பக்கத்தை நம்மால் பார்க்க முடிகிறது.

நீண்ட நெடிய பொதுவாழ்க்கையில் எல்லாவற்றையும் தாண்டி பாரதியும் மார்க்ஸும் நல்லகண்ணுவின் ஆதர்ச புருஷர்களாக இருக்கிறார்கள் எனலாம். இப்போது இவருடைய அலுவலக மேஜையில் இவர்கள் இருவரது நிழற்படங்களை மட்டும் பார்க்க முடிகிறது. இந்த நிழற்படங்களில் இருக்கும் பாரதியும் மார்க்ஸும் இரு தனி நபர்கள் மட்டுமல்ல; 72 ஆண்டுக் காலப் பயணத்தின் மொழியும் அரசியலும்.