ஸ்பானிய இயக்குநர் கார்லோஸ் சாரா நேர்காணல் - வாழ்வுடன் தொடர்புடைய கதைகளையே விரும்புகிறேன்

 
ஸ்பானிய நாட்டுப் புற இசை வடிவமான ஃபிளமாங்கோவைப் பற்றிய ‘ஃபிளமாங்கோ’ உங்களுடைய மிக முக்கியமான படமாகப் பேசப்படுகிறது. ஃபிளமாங்கோவை எப்போது விரும்பத் தொடங்கினீர்கள்?

நான் குழந்தையாக இருந்தபோது ஃபிளமாங்கோ தெருவில் பாடப்படும் இசையாக இருந்தது. 1936ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின்போதும், போருக்குப் பிறகும் தென்பகுதியில் இருந்து கட்டட வேலைகளுக்காக மாட்ரிட் வந்த தொழிலாளர்கள் இதைப் பாடுவார்கள். ஆனால் இப்போது தெருக்களில் ஃபிளமாங்கோவை யாரும் பாடுவதில்லை. ஃபிளமாங்கோ வேறு மாதிரியாக மாறிவிட்டது. கலாச்சார ரீதியாகவும் ஒழுங்குரீதியாகவும் மாறிவிட்டது. இளைஞன் ஆனபோது எனக்கு ஃபிளமாங்கோ மீது ஆர்வம் வந்தது. 

உங்களுடைய பெரும்பாலான படங்கள் நாடகம்போல இருக்கின்றன. இதைத் திட்டமிட்டுச் செய்கிறீர்களா?
 
ஆம். நாடகங்களைத்தான் படமாக்க முயன்றிருக்கிறேன். நாடகத்தில் உள்ள எளிய அழகியல் கூறுகளையும் ஓபரா நாடக மொழியையும் படங்களில் பயன்படுத்துகிறேன். இன்னொரு விஷயம், நான் நாடகங்களையும் இயக்கி இருக்கிறேன் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. 

உங்கள் எல்லாப் படங்களும் ஸ்பெயினைப் பின்னணியாகக் கொண்டவை. வெளியில் படம் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் நீங்கள் ஏன் முயற்சிக்கவில்லை? சொந்த மண்மீது உள்ள பிடிப்புதான் காரணமா?
 
எனக்குத் தெரிந்த விஷயங்களை எடுப்பது எளிதாக உள்ளது. என் கலாச்சாரப் பின்புலத்திற்கு நெருக்கமான சில நாடுகளில் வேலை பார்த்திருக்கிறேன். ஆனாலும் என் வாழ்க்கையோடு தொடர்புடைய கதையைத்தான் படமாக எடுக்கத் தேர்ந்தெடுப்பேன். 

50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் துறையில் இருக்கிறீர்கள். தொழில்நுட்ப ரீதியாக சினிமா அடைந்திருக்கும் மாற்றங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
 
சினிமா எடுக்க இப்போது பல எளிய வழிகள் வந்துவிட்டன. ஒரு சிறிய டிஜிட்டல் கேமராவை வைத்துச் சினிமா எடுத்துவிட முடியும். இது நல்ல வாய்ப்பு. ஆனால் இன்று சினிமா பொருளாதார எல்லைகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குவதாக ஆகிவிட்டது. சினிமா சுதந்திரமான எழுத்துகள்போல, ஓவியம்போல இருக்க வேண்டும். 

உங்கள் கதையைப் படமாக்குவதற்கும் வேறு ஒருவரின் கதையைப் படமாக்குவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
 
எழுதுவது எனக்குப் பிடித்த விஷயம்தான். ஆனால் எல்லாக் கதைகளையும் நானே எழுதிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலும் மற்றவர்களின் கதைகளைத்தான் படமாக்கியிருக்கிறேன். நாடகங்களை அடிப்படையாக வைத்தும் எடுத்திருக்கிறேன். ஆனால் என் கதைகளைப் படமாக்குவதில் பெரும் சுதந்திரத்தை உணர்கிறேன். 

இப்போதும் இளமையின் உற்சாகத்துடன் சினிமா எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது உங்களை வயதானவராக ஆக்குகிறதா?
 
இல்லை. இந்த அங்கீகாரம்தான் நான் உயிர்ப்புடன் இயங்குவதை உணரச் செய்கிறது. எனக்குக் கிடைத்த இந்த மரியாதைக்காக நான் கேரளாவுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். 

இந்தியப் பயணம் எப்படி இருக்கிறது?
 
நான் வியக்கும் மரியாதைக்குரிய நாடு இந்தியா. இந்தியா எனக்கு நெருக்கமாகவும் அதே சமயம் அந்நியமாகவும் இருக்கிறது. அதன் நகரங்கள், முரண்பாடுகள், பல்வேறு விதமான அதன் வண்ணங்கள் எல்லாம் வசீகரிக்கக்கூடியவையாக இருக்கின்றன. 

-ஜெய்குமார் மண்குதிரை

(13.12.2013 தி இந்து தமிழ்) 

(கார்லோஸ் சாரா, ஸ்பானிய இயக்குனர். Flamenco, Tango, Fados ஆகியவை இவரது முக்கியமான படங்கள். )